சம்பள பாக்கியை கேட்ட டிரைவர் கொலை ரியல் எஸ்டேட் அதிபர் நண்பருக்கு ஆயுள் சிறை

குன்றத்தூர், ஜன.21: சம்பள பாக்கியை கேட்ட டிரைவரை சுவற்றில் மோதி கொலை செய்த ரியல் எஸ்டேட் அதிபர் உள்பட இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் செங்கல், மணல், ஜல்லி சப்ளை செய்யும் சந்தோஷ் ஞானகுமாருடன் சேர்ந்து, அடையாறு பகுதியை சேர்ந்த குட்டி என்கிற மனோகர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். அவரிடம் டிரைவராக பணியாற்றிய மணி (60) என்பவருக்கு சம்பள பணத்தை முறையாக கொடுக்காமல் இழுத்தடித்ததாக கூறப்படுகிறது. சம்பள பாக்கியை கேட்டு, கடந்த 2014 ஏப்ரல் 24ம் தேதி அலுவலகத்துக்கு வந்த மணியை, மனோகர் மற்றும் சந்தோஷ் ஞானகுமார் ஆகிய இருவரும் இணைந்து கன்னத்தில் அறைந்தும், சுவற்றில் மோதியும், தங்க காப்பு மற்றும் கார் சாவியால் குத்தியும் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். தகவல் அறிந்து அங்கு வந்த மணியின் மனைவி, ரத்த வெள்ளத்தில் கிடந்த கணவரை, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தார்.

பின்னர், மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு மணி மாற்றப்பட்டார். ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டு, குட்டி என்கிற மனோகர், சந்தோஷ் ஞானகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு சென்னை 4வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி ஆர்.கே.பி.தமிழரசி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, போலீஸ் தரப்பில் கூடுதல் பெருநகர குற்றவியல் வழக்கறிஞர் டி.ரவிக்குமார் ஆஜராகி, இருவர் மீதான குற்றச்சாட்டுகளையும் ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்களுடன் எடுத்துரைத்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றச்சாட்டுகள் போதிய ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டதால் மனோகர் மற்றும் சந்தோஷ் ஞானகுமாருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது என்று தீர்ப்பளித்தார்.

Related Stories: