மெல்போர்ன்: ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் காலிறுதிப் போட்டியில் நேற்று, பெலாரசை சேர்ந்த உலகின் நம்பர் 1 வீராங்கனை அரீனா சபலென்கா, அமெரிக்க வீராங்கனை இவா ஜோவிக்கை வீழ்த்தி அரை இறுதிக்குள் நுழைந்தார். ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் ஆஸ்திரேலியன் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. மகளிர் பிரிவு காலிறுதிப் போட்டியில் நேற்று, பெலாரசை சேர்ந்த உலகின் முதல் நிலை வீராங்கனை அரீனா சபலென்கா, அமெரிக்காவின் இவா ஜோவிக் உடன் மோதினார். துவக்கம் முதல் அட்டகாச ஆட்டத்தை வெளிப்படுத்திய சபலென்கா முன் களமாட முடியாமல் இவா ஜோவிக் திணறினார். அதனால், 6-3 என்ற புள்ளிக் கணக்கில் முதல் செட்டை சபலென்கா எளிதில் கைப்பற்றினார்.
தொடர்ந்து நடந்த 2வது செட்டில் மேலும் ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்திய சபலென்கா ஒரு புள்ளி கூட விட்டுத் தராமல் அந்த செட்டை 6-0 என்ற புள்ளிக் கணக்கில் அநாயாசமாக வசப்படுத்தினார். அதனால், 2-0 என்ற நேர் செட்களில் வெற்றி வாகை சூடிய அவர் அரை இறுதிக்கு முன்னேறினார். மற்றொரு காலிறுதிப் போட்டியில் அமெரிக்க வீராங்கனை கோகோ காஃப், உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினா மோதினர். உலகின் 3ம் நிலை வீராங்கனையாக திகழும் காஃப், எலினாவின் நேர்த்தியான ஆட்டத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் புள்ளிகளை எளிதில் இழந்தார். அதனால், 6-1, 6-2 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்ற எலினா ஸ்விடோலினா அரை இறுதிக்கு முன்னேறினார். நாளை நடக்கும் அரை இறுதிப் போட்டியில் சபலென்கா – எலினா ஸ்விடோலினா மோதவுள்ளனர்.
* ஆஸி ஓபன் டென்னிஸ் காலிறுதி: அல்காரஸ், ஸ்வெரெவ் அரையிறுதிக்கு தகுதி
ஆஸ்திரேலியன் ஓபன் ஆடவர் ஒற்றையர் காலிறுதிப் போட்டியில் நேற்று, ஜெர்மன் வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரெவ், அமெரிக்க வீரர் லேர்னர் டியன் மோதினர். இப்போட்டியில் இரு வீரர்களும் சளைக்காமல் ஆக்ரோஷமாக மோதினர். இருப்பினும் முதல் செட்டை 6-3 என்ற புள்ளிக் கணக்கில் ஸ்வெரெவ் கைப்பற்றினார். விறுவிறுப்பாக நடந்த 2வது செட் டைபிரேக்கர் வரை நீண்டது. அந்த செட்டை, 7-6 (7-5) என்ற புள்ளிக்கணக்கில் லேர்னர் கைப்பற்றினார். பின் சுதாரித்து ஆடிய ஸ்வெரெவ், 3வது செட்டை 6-1 என்ற புள்ளிக்கணக்கில் எளிதில் வசப்படுத்தினார். தொடர்ந்து 4வது செட்டில் சிறப்பாக ஆடிய ஸ்வெரெவ், 7-6 (7-3) என்ற புள்ளிக் கணக்கில் வாகை சூடினார்.
இதன் மூலம், 3-1 என்ற செட் கணக்கில் வென்ற அவர் அரை இறுதிக்குள் நுழைந்தார். மற்றொரு காலிறுதியில் ஸ்பெயினை சேர்ந்த உலகின் முதல் நிலை வீரர் கார்லோஸ் அல்காரஸ், ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டிமினார் மோதினர். விறுவிறுப்பாக நடந்த இப்போட்டியின் முதல் செட்டை 7-5 என்ற புள்ளிக் கணக்கில் அல்காரஸ் போராடி கைப்பற்றினார். அடுத்து நடந்த 2 செட்களிலும் வேகம் குறையாமல் அசத்தலாய் ஆடிய அல்காரஸ், 6-2, 6-1 என்ற புள்ளிக் கணக்கில் அந்த செட்களை வசப்படுத்தினார். அதனால், 3-0 என்ற நேர் செட்களில் வெற்றிவாகை சூடிய அவர் அரை இறுதிக்கு தகுதி பெற்றார்.
