புதுவையில் தொழில்நுட்ப பூங்கா வீடு கட்டும் திட்ட மானியத்தை ரூ.6.25 லட்சமாக உயர்த்த நடவடிக்கை

*குடியரசு தின உரையில் கவர்னர் தகவல்

புதுச்சேரி : மாநில அரசின் வீட்டு வசதி திட்டங்கள் பிரதம மந்திரியின் வீட்டு வசதி திட்டத்தோடு இணைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின்படி பொது பிரிவினருக்கான மானியத்தொகை ரூ.6.25 லட்சமாகவும், அட்டவணை இனத்தவருக்கு ரூ.7 லட்சமாகவும் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கவர்னர் கைலாஷ்நாதன் கூறினார்.புதுச்சேரியில் நடந்த குடியரசு தினவிழாவில் கவர்னர் கைலாஷ்நாதன் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

இந்தியாவின் வளர்ச்சியை போலவே, புதுச்சேரி மாநிலமும் வளர்ச்சியின் புதிய அத்தியாயத்தை எழுதிக் கொண்டிருக்கிறது. மாநிலத்தின் எழுச்சியும், வளர்ச்சியும் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு வேகம் எடுத்து இருக்கிறது.

கல்வி, சுகாதாரம், உள்கட்டமைப்பு, மக்கள் நலத்திட்டங்கள் உள்ளிட்ட பல துறைகளில் புதுச்சேரி ஒரு முன்னோடி மாநிலமாக உருவெடுத்து வருகிறது. இந்திய அளவில் சிறப்பான நிர்வாகம் செய்யப்படும் மாநிலங்களில் ஒன்றாக புதுச்சேரி திகழ்கிறது.

காவல்துறை, பொதுப்பணித்துறை, சுகாதாரத்துறை, கல்வித்துறை, வருவாய்த்துறை போன்ற பல அரசு துறைகளில் காலியாக இருந்த சுமார் 4,000 பணியிடங்கள் நிரப்பப்பட்டு உள்ளன. மேலும் 1,200 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு 500 பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகளும் தொடங்கப்பட்டு இருக்கிறது.

இதற்காக, தனியாக மாநில தேர்வு ஆணையம் அமைக்கப்பட்டு வெளிப்படை தன்மையோடு பணி நியமனங்கள் நடைபெற்று வருகின்றன. வேலை என்ற கனவை நனவாக்கியதோடு நாட்டின் வளர்ச்சியில் பங்காற்றும் நம்பிக்கையை வழங்கி வருகிறது. அரசின் இந்த நடவடிக்கை நிர்வாகத்தில் புது ரத்தம் பாய்ச்சி இருப்பதோடு மக்கள் நலத்திட்டங்கள் பயனாளிகளுக்கு உரிய நேரத்தில் உரிய முறையில் சென்றடைவதை உறுதி செய்கிறது.

இளைஞர்கள் தான் எதிர்கால இந்தியாவின் நம்பிக்கை. அவர்களுடைய அறிவும், ஆற்றலும், உழைப்பும் நாட்டின் ஆக்கப்பூர்வமான வளர்ச்சிக்கு பயன்பட வேண்டும்.புதுச்சேரி இளைஞர்களுக்கு உள்ளூரில் வேலை வாய்ப்புகள் பெறும் நோக்கில் தொழில்நுட்ப பூங்கா அமைப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 14 இடங்களில் செயற்கை பாறை திட்டம், கடல்பாசி வளர்ப்பு திட்டம், ஒருங்கிணைந்த கூண்டு மீன் வளர்ப்பு திட்டம் ஆகியவை செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடல்பாசி வளர்ப்பு திட்டம் மீனவ பெண்களின் பொருளாதார வளர்ச்சியில் மிகப்பெரிய பங்காற்றி வருகிறது.

காரைக்கால் மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பதால் எழும் சிக்கல்களை போக்க ஆழ்கடல் மீன்பிடி திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. அதற்காக ஐந்து பெண்களுக்கு ஆழ்கடல் மீன்பிடி படகுகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.ஏழை, எளிய மக்களின் வீடு கட்டும் கனவை நனவாக்கும் விதமாக மாநில அரசின் வீட்டு வசதி திட்டங்கள் பிரதம மந்திரியின் வீட்டு வசதி திட்டத்தோடு இணைக்கப்பட்டு உயர்த்தப்பட்ட மானியமாக வழங்கப்படுகிறது.

அதன்படி, பொது பிரிவினருக்கு ரூ.5 லட்சமும், அட்டவணை இனத்தவருக்கு மானியமாக ரூ.6.25 லட்சம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த மானியத்தொகை பொது பிரிவினருக்கு ரூ.6.25 லட்சமாகவும், அட்டவணை இனத்தவருக்கு ரூ.7 லட்சமாகவும் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

முதியோர் மற்றும் கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கான ஓய்வூதியம் தலா ரூ.500 வீதம் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. அதற்காக கூடுதலாக ரூ.9.8 கோடியுடன் மாதம் ஒன்றுக்கு ரூ.55 கோடி ஒதுக்கப்படுகிறது.

இதன் மூலமாக புதுச்சேரியில் 1.92 லட்சம் பேர் பயனடைந்து வருகிறார்கள். இந்த அரசு நலத்திட்டங்களை மக்களுக்கான சலுகையாக பார்க்கவில்லை. அவர்களுடைய சமுதாய உரிமையாக பார்க்கிறது. அதன் அடிப்படையில் அனைத்து மக்கள் நலத்திட்டங்கள் மூலமாகவும் வழங்கப்படும் நிதியுதவி உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.

புதுச்சேரி மிகச் சிறந்த சுற்றுலா மையமாக வளர்ந்து வருகிறது. பிரான்ஸ் நாட்டின் துலுஸ் நகரத்திற்கு அடுத்தபடியாக சுற்றுலா பயணிகள் அதிகம் நாடும் இடமாக புதுச்சேரி இருப்பது நம்முடைய பெருமை. அதனால் சுற்றுலா உட்கட்டமைப்பு வலுப்படுத்துவதில் அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதற்கான ரயில், விமானம் மற்றும் சாலை மார்க்கமாக மற்ற நகரங்களோடு இணைப்பதற்கான திட்ட வரைவு உருவாக்கப்பட்டு இருக்கிறது.

புதுச்சேரி மாநிலத்தின் ஒருங்கிணைந்த வளர்ச்சியே அரசின் குறிக்கோள். இந்த பங்களிப்போடு மக்களின் ஒத்துழைப்பு இணைந்தால் மட்டுமே புதுச்சேரி மாநிலம் தனிச்சிறப்போடு வளர்ச்சி அடைய முடியும்.

நாம் அனைவரும் ஒற்றுமையோடு செயல்பட்டு பிரதமர் சொன்ன பெஸ்ட் புதுச்சேரியை உருவாக்குவோம். வளர்ந்த இந்தியா, வளரும் புதுச்சேரி என்ற இலக்கை அடைவதற்கு அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவோம். இவ்வாறு கவர்னரின் குடியரசு தின உரையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: