77வது குடியரசு தின விழா கொண்டாட்டம்

* கலெக்டர், மேயர் உள்ளிட்டோர் தேசியக்கொடி ஏற்றினர்

* மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் ஜோர்

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில், நாட்டின் 77வது குடியரசு தின விழா நேற்று நடைபெற்றது.

இதற்கு டிஐஜி சாமிநாதன், எஸ்பி பிரதீப், மாவட்ட வன அலுவலர் நாகசதீஷ் கிடிஜாலா, டிஆர்ஓ ஜெயபாரதி, மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலெக்டர் சரவணன் தலைமை வகித்து தேசியக் கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து சமாதானத்தின் அடையாளமாக வெண்புறாக்கள் மற்றும் வண்ண பலூன்கள் பறக்கவிடப்பட்டது.

பின்னர், காவல், தீயணைப்புத்துறையினர் மற்றும் ஊர்க்காவல் படையினரின் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது. விழாவில் 95 பேருக்கு முதலமைச்சர் காவலர் பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கிய கலெக்டர் சரவணன் விடுதலைப் போராட்டம் மற்றும் மொழிப்போர் தியாகிகள், அவர்களின் வாரிசுகள், உடலுறுப்புகள் தானம் செய்தோர் குடும்பத்தினர் உள்ளிட்டோருக்கு பொன்னாடை அணிவித்து கெளரவித்தார்.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை உள்பட பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 450 அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டது.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ஒருவருக்கு மூன்று சக்கர பெட்ரோல் ஸ்கூட்டர், மகளிர் சுயஉதவிக்குழு கடன், விலையில்லா தையல் இயந்திரம், தேய்ப்பு பெட்டிகள் என, 12 பேருக்கு ரூ.92.66 லட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

இதையடுத்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இவற்றில் 436 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். அவர்கள் அனைவருக்கும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில் உதவி கலெக்டர் (பயிற்சி) வினோதினி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திலகவதி, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் சதீஸ்பாபு, திண்டுக்கல் ஆர்.டி.ஒ. திருமலை, கலெக்டரின் நேர்முக உதவியாளர் கீர்த்தனா மணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

* திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில், மேயர் இளமதி ஜோதிபிரகாஷ் தலைமை தாங்கி தேசியக்கொடி ஏற்றி வைத்தார். இதில் துணை மேயர் ராஜப்பா, மாநகராட்சி ஆணையர் செந்தில் முருகன் முன்னிலை வகித்தனர்.

முன்னதாக மகாத்மா காந்தி உருவச்சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பின்னர் மாநகராட்சியின் தூய்மை பணிகளுக்காக ரூ.1 கோடியில் வழங்கப்பட்ட 6 இலகு ரக மின்சார வாகனங்களின் செயல்பாடுகளை, மேயர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

* கொடைக்கானல் நகராட்சி அலுவலகத்தில் நகர் மன்ற தலைவர் செல்லத்துரை தலைமை தாங்கி மகாத்மாக காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். இதில் நகர் மன்ற துணைத் தலைவர் மாயக்கண்ணன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

* குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், வட்டார வளர்ச்சி அலுவலர் கற்பகம் தேசியக்கொடியேற்றினார். கூடுதல் வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாத்துரை பங்கேற்றார். பாளையம் பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி தலைவர் பழனிச்சாமி கொடியேற்றினார். செயல் அலுவலர் பாஸ்கரன் பங்கேற்றார். குஜிலியம்பாறையில் தாசில்தார் ரவிக்குமார், மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர் கிஷோர்குமார் கொடியேற்றினார்.

* நிலக்கோட்டையில் பேரூராட்சி தலைவர் சுபாஷினி பிரியா கதிரேசன் தேசியக்கொடி ஏற்றினார். செயல் அலுவலர் மோகன்குமார், துணைத்தலைவர் எஸ்பி.முருகேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தூய்மை பணியாளர்களுக்கு சீருடை மற்றும் அறுசுவை உணவு வழங்கினர்.

* அம்மையநாயக்கனூரில் பேரூராட்சி தலைவர் எஸ்பி.செல்வராஜ், தேசியக்கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

இதில் செயல் அலுவலர் பூங்கொடி முருகு, சுகாதார ஆய்வாளர் செந்தில்குமார், கவுன்சிலர்கள் மாரியப்பன், காசியம்மாள், முகமது நசீர், செல்வி மற்றும் துப்புரவு மேற்பார்வையாளர் அசோக்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர். தொடர்ந்து தூய்மை பணியாளர்களுக்கு சீருடை மற்றும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.

* ஒட்டன்சத்திரம் நகராட்சி துல்கருணை சிக்கந்தர் நகர் பள்ளிவாசலில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில், நகர்மன்ற துணைத் தலைவர் வெள்ளைச்சாமி தேசியக்கொடியேற்றி, மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கினார்.

ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கலைஞர் வீடுகள் உதவி திட்ட அலுவலர் பிரபாகரன் கொடியேற்றினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் காமராஜ், பிரபு பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஒட்டன்சத்திரம் நகராட்சி அலுவலகத்தில், நகர்மன்ற தலைவர் திருமலைசாமி கொடியேற்றினார். துணைத்தலைவர் வெள்ளைச்சாமி, பொறியாளர் சுப்பிரமணிய பிரபு, சுகாதார ஆய்வாளர் கார்த்திக், நகர் மன்ற உறுப்பினர்கள், நகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர். ஒட்டன்சத்திரம் தாசில்தார் அலுவலகத்தில் தாசிலதாரை் சஞ்சய் காந்தி கொடியேற்றினார்.

கொடியேற்றிய தூய்மை காவலர்…

நிலக்கோட்டை ஒன்றியம் பச்சைமலையான்கோட்டை ஊராட்சியில், குடியரசு தின விழாவை முன்னிட்டு, கிராம தூய்மை காவலர்களின் சேவையை பாராட்டும் வகையில், ஊராட்சி செயலர் ஜெய்கணேஷ் தலைமையில், தூய்மை காவலர் முத்துஇருளன் தேசியக்கொடி ஏற்றி வைத்தார். பின்னர் பள்ளி மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கினர். அதனைத் தொடர்ந்து அனைத்து தூய்மை பணியாளர்களுக்கு சீருடை வழங்கப்பட்டது. இதில் பள்ளி ஆசிரியர்கள், பொதுமக்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Related Stories: