தொண்டாமுத்தூர் : தைப்பூச தேர்த்திருவிழாவிற்காக மருதமலை மற்றும் குருந்தமலையில் நேற்று கொடியேற்ற விழா நேற்று நடைபெற்றது.கோவை அருகே உள்ள மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயில் தைப்பூச திருவிழா நேற்று அதிகாலை கோ பூஜையுடன் துவங்கியது.
16 திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்று மூலவர் விநாயகர் பூஜை நடைபெற்றது. சுப்பிரமணியசுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். பின்னர் மகா தீபாராதனை நடைபெற்றது. முன் மண்டபத்தில் சிறப்பு யாகம் நடைபெற்றது.
யாகத்தில் முருகனின் கொடியான சேவல் கொடி மற்றும் தேரில் வைக்கப்படும் மூகூர்த்தங்கால் கொண்டு சிறப்பு யாகம் நடந்தது. தொடர்ந்து தங்க கற்ப விருச்சக வாகனத்தில் வள்ளி, தெய்வானை உடன் சுப்பிரமணியசுவாமி எழுந்தளினார். பின்னர் திருவீதி உலா நடைபெற்றது. பின்னர் பக்தர்கள் அரோகரா கோஷம் முழங்க சேவல் கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து சிவாச்சாரியர்கள் வேத மந்திரம் முழங்க கொடி கம்பத்திற்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து திருமண மண்டபத்தில் வள்ளி தெய்வானை உடன் சுப்பிரமணியசுவாமி தங்க விருச்சிக வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.
வரும் 31ம் தேதி காலை 11 மணிக்கு திருக்கல்யாண நடைபெற உள்ளது. பிப்ரவரி 1ம் தேதி மதியம் 3 மணியளவில் திருத்தேர் வடம்பிடித்து இழுத்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் ஜெயக்குமார், துணை ஆணையர் செந்தில் குமார் உள்ளிட்டவர் ஏற்பாடு செய்து வருகின்றனர்.
தைப்பூசத்திருவிழாவையொட்டி வருகிற 31ம் தேதி முதல் பிப்ரவரி 2ம் தேதி வரை மலைக் கோவிலுக்கு செல்ல இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு அனுமதி இல்லை என வடவள்ளி போலீசார் மற்றும் கோவில் நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
காரமடை: காரமடையை அடுத்துள்ள குருந்தமலை குழந்தை வேலாயுத சுவாமி கோயிலில் தைப்பூச தேர்த்திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு கிராம சாந்தி நடைபெற்றது. தொடர்ந்து நேற்று காலை யாக சாலை பூஜை வேள்வியில் முருகனின் வேல் வைக்கப்பட்டு கணபதி ஹோமம்,வேத மந்திரங்கள் முழங்க மகா ஆரத்தி நடைபெற்றது.
அதனை தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும்,ராஜ அலங்கார பூஜைகளும் நடைபெற்றது.பின்பு,சேவல் மற்றும் வேல் உருவப்படம் பொறிக்கப்பட்ட கொடியானது கொடிக்கம்பத்தில் ஏற்றப்பட்டது. அதன் பின்பு வேத பாராயணம் ஓதப்பட்டது.அதனை தொடர்ந்து மகா தீபாராதனை,தீர்த்த பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
தொடர்ந்து வரும் ஜன.30ம் தேதி இரவு அம்மன் அழைப்பு, ஜன.31ம் தேதி காலை திருக்கல்யாண உற்சவம், மாலை யானை வாகன உற்சவமும் நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி வரும் பிப்.1ம் தேதி மாலை 4 மணியளவில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் அறங்காவலர் குழு தலைவர் மோகனப்பிரியா கணேசன்,அறங்காவலர் குழு உறுப்பினர்கள் குழந்தைவேலு, சாவித்திரி,சுரேஷ்குமார், முருகன்,கோயில் செயல் அலுவலர் வனிதா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உட்பட நூற்றுக்கணக்கான பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.
