உடுமலை : உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி நகர் கிராமத்தில் திருமூர்த்தி அணை அருகில் ரமேஷ் என்பவரது தென்னந்தோப்பு உள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு புகுந்த காட்டுயானைகள் தென்னை மரங்களை வேட்டையாடின. 100-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை வேரோடு பிடுங்கிப் போட்டன.
சோலார் மின்சார வேலிகள் முற்றிலும் சேதம் அடைந்தன. யானைகள் தோப்பில் புகுந்ததை கண்டு அப்பகுதியில் குடியிருந்த விவசாய பண்ணை ஆட்கள் வெளியில் ஓடி தப்பித்தனர்.
இதுகுறித்து உடுமலை விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் கூறுகையில், “மலையடிவார கிராமங்களில் யானைகள் வராதபடி அகழிகள் அமைக்க வேண்டும் என பலமுறை கோரிக்கை வைத்தும், செய்து விடுவோம் என்று வாக்குறுதி மட்டும் தரும் வனத்துறை பின்னர் கண்டுகொள்வதில்லை.
காய் பிடித்திருந்த தென்னைகளை யானைகள் முற்றிலும் சேதப்படுத்தி விட்டன. இதனால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. விவசாய பண்ணையாளர்கள் உயிர் போயிருந்தால் உயிரை திருப்பித் தருமா வனத்துறை? எனவே, யானைகளை விரட்ட உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.
