*பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
பொள்ளாச்சி : பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை தாலுகாவில் உள்ள 84 ஊராட்சிகளில் நேற்று, குடியரசு தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடந்தது. இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோவை மாவட்டத்தில் அனைத்து ஒன்றியங்களில் உள்ள ஊராட்சிகளில்,ஒவ்வொரு ஆண்டும் முக்கிய நாட்களில் கிராமசபை கூட்டம் நடத்தப்பட்டு சிறப்பு தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது.
இந்த ஆண்டில், குடியரசு தினத்தை முன்னிட்டு ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் நடத்த, மாவட்ட கலெக்டர் பவன்குமார் உத்தரவிட்டிருந்தார். அதன்படி நேற்று குடியரசு தினத்தையொட்டி, ஒன்றிய ஊராட்சி கிராமங்களில், அந்தந்த ஊராட்சி செயலர்கள் முன்னிலையில் கிராமசபை கூட்டம் நடந்தது.
பொள்ளாச்சி தாலுகாவிற்குட்பட்ட வடக்கு, தெற்கு, மற்றும் ஆனைமலை தாலுகாவில் ஆனைமலை ஒன்றியத்தில், நேற்று குடியரசு தினத்தை முன்னிட்டு நடந்த கிராமசபை கூட்டத்தின் போது, ‘ஊரட்சியின் திட்ட அறிக்கை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம்,கிராமங்களில் முழு சுகாதார திட்டம், கலைஞரின் வீடு கட்டும் திட்டம்,குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துதல், திடக்கழிவு மேலாண்மை திட்டம், ஒருங்கிணைந்த சுகாதார வளாகம் அமைத்தல், மகளிர் திட்டம் மற்றும் கிராம ஊராட்சிகளின் மூலம் மேற்கொள்ளப்படும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள்’ குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் வடக்கு ஒன்றியத்துக்குட்பட்ட 39 ஊராட்சி, தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட 26 ஊராட்சி என, 3 ஒன்றியங்கத்திற்குட்பட்ட 84 ஊராட்சிகளிலும் நடந்த கிராம சபை கூட்டத்தின் போது சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 1500க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இருப்பினும், பல்வேறு ஊராட்சிகளில் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள், சாக்கடை சீரமைப்பு,குடிநீர் பிரச்னை,தெருவிளக்கு விசதி,சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் குறித்த புகார்களை எடுத்துரைத்ததுடன் அதுகுறித்து மனுவாகவும் எழுதி கொடுத்துள்ளனர்.
ஊராட்சிகளில் நடந்த கிராம சபை கூட்டங்களை, ஒன்றிய ஆணையாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்), துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், விரிவு அலுவலர்கள் உள்ளிட்ட ஒன்றிய அலுவலர்களும் கண்காணித்தனர்.
இதில், பக்கோதிபாளையம் ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில், கோவை தெற்கு மாவட்ட கங்கிரஸ் கமிட்டி முன்னாள் செயலாளர் பகவதி பங்கேற்று கொடுத்த மனுவில், ‘மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலையுறுதி திட்டம், ஏழை எழிய மக்கள் பயன்பெறும் வகையில் டாக்டர் மன்மோகன் சிங் ஆட்சியில் கொண்டு வரப்பட்டது.
இந்த வேலை உறுதி திட்டத்தை நிறுத்தும் ஒன்றிய அரசு, கிராமப்புறங்களின் வளர்ச்சிக்காக மீண்டும் அதனை அமல்படுத்துவதுடன், மகாத்மா காந்தி பெயரிலேயே, வேலையுறுதி திட்டம் செயல்படுத்தப்படுத்த வேண்டும்’ இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
