*3 நாட்களில் 10 ஆயிரம் பேர் வருகை
பொள்ளாச்சி : பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அணைக்கு தொடர் விடுமுறையையொட்டி, சுற்றுலா பயணிகள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்தனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அணை, மற்றும் பூங்கா ஆகியவற்றிற்கு தினமும் உள்ளூர் மற்றும் வெளியூர், வெளி மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
விடுமுறை நாட்களில் கூட்டம் அதிகளவில் இருக்கும். இதில் கடந்த சனிக்கிழமை முதல் இன்று குடியரசு தினம் என 3 நாட்கள் விடுமுறை என்பதால், ஆழியாருக்கு சுற்றுலா பயணிகள் வருகை இருந்தது.
இதில், நேற்று குடியரசு தின விடுமுறையையொட்டி, ஆழியார் அணைக்கு பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும், திருப்பூர், ஈரோடு, சேலம், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வழக்கத்தைவிட அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்தனர்.இவர்கள் குடும்பத்துடன் வந்து, ஆழியார் பூங்காவில் வெகுநேரம் பொழுதை கழித்து சென்றனர்.
பொங்கலுக்கு பிறகு, கடந்த சில நாட்களாக ஆழியார் அணைக்கு சுற்றுலா பயணிகள் வழக்கத்திற்கு மாறாக அதிகளவு இருந்ததால், ஏராளமான இருசக்கர மற்றும் கார், வேன் ஆகிய வாகனங்கள் வால்பாறை ரோட்டில் நீண்ட வரிசையில் நிறுத்தப்பட்டிருந்தன.
பயணிகள் கூட்டத்தை கட்டுப்படுத்தவும், சட்டவிரோத செயல்களை தடுக்கவும், பாதுகாப்பு பணியில் ஆழியார் போலீசார் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர்.
