பொள்ளாச்சி : பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் நேற்று, நாட்டின் 77வது குடியரசு தினவிழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் மருத்துவமனை கண்காணிப்பாளர் ராஜா தலைமை தாங்கி, தேசியக் கொடியேற்றி வைத்தார். இருப்பிட மருத்துவ அலுவலர் மாரிமுத்து முன்னிலை வகித்தார்.
விழாவில் மருத்துவமனையில் சிறப்பாக பணியாற்றிய டாக்டர்கள்,செவிலியர்கள் உள்ளிட்ட பலருக்கு பாராட்டுச்சான்று மற்றும் பரிசு கேடயம் வழங்கப்பட்டது.
பொள்ளாச்சி அருகே கோடங்கிபட்டி ஊராட்சி ஒன்றிய பள்ளியில் நடைபெற்ற குடியரசு தினவிழா நிகழ்ச்சிக்கு கல்விக்குழு தலைவர் சோபனா தலைமை தாங்கினார்.தலைமை ஆசிரியர் தினகரன் வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக டாக்டர் ஜெகதீஸ்வரன் கலந்து கொண்டு, தேசியக்கொடியேற்றி வைத்து மாணவர்களுக்கு இனிப்பு வழங்கினார்.பின் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் நடைபெற்ற குடியரசு தின விழாவுக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் கணேசன் தலைமை தாங்கி, தேசியக்கொடியேற்றி வைத்தார். பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் மாரியம்மாள் முன்னிலை வகித்தார்.விழாவில் தேச தலைவர்களை போற்றும் விதமாக மாறுவேட போட்டி நடைபெற்றது.
அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. பொள்ளாச்சி ஜோதிநகரில் உள்ள பூங்காவில், விவேகானந்தர் கலை மற்றும் நற்பணி மன்றம்,கோயில் தீபங்கள் அறக்கட்டளை சார்பில் குடியரசு தினவிழாவுக்கு, சங்க தலைவர் திருமயில்சாமி தலைமை தாங்கினார். செயலாளர் ரகுபதி முன்னிலை வகித்தார்.
இதல், அறக்கட்டளை அறங்காவலர் பழனியப்பன் கலந்து கொண்டு, தேசியக்கொடியேற்று வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். ஆனைமலை கிளை நூலகத்தில் நடைபெற்ற குடியரசு தினவிழாவிற்கு, வாசகர் வட்ட தலைவர் ராம்குமார் தலைமை தாங்கினார். துணை தலைவர் மணிகண்டன் முன்னிலை வகித்தார்.இதில், பேரூராட்சி தலைவர் கலைசெல்வி, துணை தலைவர் ஜாபர் அலி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
பொள்ளாச்சி அருகே உள்ள பாரதி படிப்பகத்தில் நடைபெற்ற குடியரசு தினவிழாவுக்கு, செயலாளர் மயில்சாமி தலைமை தாங்கினார். திட்ட இயக்குனர் ஞானசேகரன் வரவேற்றார். இதில் தேசியக்கொடியேற்றப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. மேலும், சிறப்பான செயல்பாட்டாளர்களுக்கு சேவை விருது வழங்கப்பட்டது.
