*புதிய நிர்வாகிகள் தேர்வு
கந்தர்வகோட்டை : தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட மாநாடு கந்தர்வகோட்டையில் நடைபெற்றது.
மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் 17 வது புதுக்கோட்டை மாவட்ட மாநாடு கந்தர்வகோட்டை உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் கருத்தரங்கம், பிரதிநிதிகள் மாநாடு, விழிப்புணர்வு பேரணி, பொதுக்கூட்டம் என அறிவியல் அறிவோம், அறிவியலால் இணைவோம் என்ற மையக்கருத்தை அடிப்படையாகக் கொண்டு நடைபெற்றது. கருத்தரங்கத்திற்கு பேராசிரியர் பிச்சைமுத்து தலைமை வகித்தார்.
அறிவியல் மாநில பொதுக்குழு உறுப்பினர் மணவாளன் தொடக்க உரை நிகழ்த்தினார். முதுநிலை விஞ்ஞானி ராஜ்குமார் கருத்துரை வழங்கினார். கவிஞர் ஜிவி சிறப்புரையாற்றினார். பின்னர் நடைபெற்ற பிரதிநிதிகள் மாநாட்டிற்கு மாவட்ட தலைவர் முத்துக்குமார் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் வீரமுத்து வேலை அறிக்கையை முன் வைத்து பேசினார்.
மாவட்டப் பொருளாளர் விமலா வரவு -செலவு அறிக்கை முன் வைத்தார். பின்னர் மாவட்ட தலைவராக பிச்சைமுத்து, மாவட்ட செயலாளராக ஜெயராம், மாவட்ட பொருளாளராக சோபா, துணைத்தலைவர்கள் இணைச் செயலாளர்களென 17 பேர் அடங்கிய புதிய நிர்வாகக்குழு தேர்வு செய்யப்பட்டது.
பின்னர் அக்கச்சிப்பட்டியிலிருந்து கந்தர்வகோட்டை பேருந்து நிலையம் வரை நடைபெற்ற அறிவியல் விழிப்புணர்வு பேரணியை கந்தர்வகோட்டை எம்எல்ஏ சின்னதுரை கொடியசைத்து துவங்கி வைத்தார். இந்த பேரணியில் 250க்கும் மேற்பட்ட அறிவியல் இயக்க உறுப்பினர்களும், இளைஞர்கள், பள்ளி மாணவர்களும் கலந்துகொண்டனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மாணவர்களுக்கு பல்வேறு திட்டங்கள் கொண்டு வந்துள்ளதை வரவேற்று தமிழ்நாடு அரசு நன்றி தெரிவித்து தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும் காவிரி ஆற்று உபரி நீர் செங்கிப்பட்டி வழியாக கந்தர்வகோட்டைக்கு ஏற்கனவே உள்ள நீர்நிலை, குளங்களின் பாதைகளை சீரமைத்து கொண்டு வர அரசு வழிவகை செய்ய வேண்டும்.
அரசு பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் வகையில் வருடந்தோறும் அறிவியல் சுற்றுலா ஏற்பாடு செய்ய வேண்டும். தமிழ்நாடு அரசு கனிம வளங்களை பாதுகாத்திட தனிச்சட்டம் நிறைவேற்ற வேண்டும்.
புதுக்கோட்டை மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தில் 5000 உறுப்பினர்களை சேர்ப்பது, மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து ஒன்றியங்களிலும் புத்தகத் திருவிழாக்களை நடத்த முயற்சி எடுப்பது, மது உள்ளிட்ட போதை விற்பனை செய்யும் விற்பனை மையங்களில் மது வாங்குவதற்கும் பயன்படுத்துவதற்கும் குறைந்தபட்ச வயதை அரசு அறிவித்து இளைஞர்களின் வாழ்க்கையை பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
