சிறப்பு ரயில்வே மாஜிஸ்திரேட் தனக்குத்தானே நீதிபதியாக செயல்பட முடியாது: உச்ச நீதிமன்றம் அதிரடி

புதுடெல்லி: பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றத்திற்கு உட்பட்ட அம்பாலா பகுதியில் சிறப்பு ரயில்வே மாஜிஸ்திரேட் ஒருவர் பணியாற்றி வருகிறார். இவர் ரயில்களில் டிக்கெட் பரிசோதனை செய்வதற்கும், விதிமீறல்களில் ஈடுபடுவோருக்கு அபராதம் விதிப்பதற்கும் தனக்கு போதிய ஊழியர்களை ரயில்வே நிர்வாகம் வழங்கவில்லை என்று புகார் கூறியிருந்தார். இது தனது பணிக்கு இடையூறு விளைவிப்பதாகக் கூறி, வடக்கு ரயில்வேயின் மூத்த வர்த்தக மேலாளர் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக நோட்டீஸ் அனுப்பியதுடன், தலைமை நீதித்துறை மாஜிஸ்திரேட்டிடம் குற்றவியல் புகாரையும் அளித்தார்.

இந்த விவகாரத்தில் ரயில்வே அதிகாரிகளின் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததோடு, ஊழியர்களை வழங்காதது கண்டிக்கத்தக்கது என்றும், ரயில்வே அதிகாரிகளுக்கு மாஜிஸ்திரேட்டின் அதிகாரத்தை கேள்வி கேட்க உரிமையில்லை என்றும் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து ரயில்வே நிர்வாகம் சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் என்.கே.சிங் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து அதிரடி தீர்ப்பளித்தனர். அப்போது நீதிபதிகள், ‘யாரும் தமக்குத்தாமே நீதிபதியாக இருக்க முடியாது என்ற பழமொழி நீதிபதிகளுக்கும் பொருந்தும். இந்த வழக்கில் ரயில்வே மாஜிஸ்திரேட் தனக்கான வழக்கில் தானே நீதிபதியாக செயல்பட முயன்றுள்ளார். அவர் அனுப்பிய கடிதத்தை நீதித்துறை நடவடிக்கையாக கருத முடியாது. அதிகாரிகள் தங்கள் அதிகார வரம்பிற்கு உட்பட்டே செயல்பட்டுள்ளனர்’ என்று கருத்து தெரிவித்தனர்.

Related Stories: