கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரிடையே ஏற்பட்ட மோதலில் மேடை தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள பெஹாலா, சக்கர்பஜார் பகுதியில் பாஜக சார்பில் ‘பரிவர்தன் சங்கல்ப் சபா’ என்ற பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திரிபுரா மாநில முன்னாள் முதல்வர் விப்லவ் தேவ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அவர் பேசி முடித்துவிட்டு அங்கிருந்து சென்ற சிறிது நேரத்திலேயே அப்பகுதியில் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அமைதியாக தொடங்கிய கூட்டம் திடீரென கலவரமாக மாறியதால் அப்பகுதியே போர்க்களம் போல் காட்சியளித்தது. டைமண்ட் ஹார்பர் சாலையில் நடந்த இந்த வன்முறையால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து முடங்கியது. இந்த சம்பவத்தில், பாஜக பொதுக்கூட்ட மேடை தீ வைத்து கொளுத்தப்பட்டது.
தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை அணைத்தன. இதுகுறித்து ஒன்றிய அமைச்சர் சுகந்த மஜும்தார் கூறுகையில், ‘திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்கள் காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தி மேடையை எரித்துள்ளனர்’ என்று குற்றம் சாட்டினார். ஆனால், ‘அப்பகுதியில் நடந்த பேட்மிண்டன் போட்டியில் ஒலிபெருக்கி சத்தம் தொடர்பாக தகராறு செய்து, கவுன்சிலர் அலுவலகத்தை பாஜகவினர் தான் முதலில் சூறையாடினர்’ என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ ரத்னா சாட்டர்ஜி தெரிவித்துள்ளார். பதற்றத்தை தணிக்க விரைவு அதிரடிப்படையினர் மற்றும் போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
