மணாலி: இமாச்சல பிரதேசத்தில் உள்ள மலைப்பிரதேசங்களில் தற்போது கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. குறிப்பாக இந்தாண்டு சீசனின் முதல் கனமான பனிப்பொழிவு காரணமாக மாநிலம் முழுவதும் மக்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் போக்குவரத்து அடியோடு முடங்கியுள்ளது. அடல் குகைப்பாதை மற்றும் ரோக்டாங் கணவாய் உள்ளிட்ட முக்கிய வழித்தடங்கள் உட்பட 800க்கும் மேற்பட்ட சாலைகள் பனிக்கட்டிகளால் மூடப்பட்டுள்ளன. மேலும் இன்று முதல் 28ம் தேதி வரை மீண்டும் கனமழை மற்றும் பனிப்பொழிவு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால், மீட்புப் பணிகள் மற்றும் சாலைகளை சீரமைக்கும் பணிகளில் பெரும் சவால் ஏற்பட்டுள்ளது. மணாலி நகரை நோக்கி ஆயிரக்கணக்கான சுற்றுலா வாகனங்கள் படையெடுத்ததால் பாட்லிகுஹால் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
வெறும் 15 கிலோ மீட்டர் தூரத்தை கடக்க 10 முதல் 12 மணி நேரம் வரை ஆனதால், சுமார் 600க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் இரவு முழுவதும் நடுரோட்டில் தங்கள் வாகனங்களிலேயே தங்கும் அவல நிலை ஏற்பட்டது. மைனஸ் 1.1 டிகிரி செல்சியஸ் உறைபனி குளிரில், உணவு மற்றும் அடிப்படை வசதிகள் இன்றி 25 மணி நேரத்திற்கும் மேலாக பலர் தவித்தனர். பலர் தங்கள் கார்களை அங்கேயே விட்டுவிட்டு பனியில் நடந்தே சென்றனர். இதுகுறித்து போலீசார் தரப்பில், ‘பாட்லிகுஹால் மற்றும் புந்தார் பகுதிகளில் புதிய வாகனங்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மீட்பு பணிகளுக்காக நான்கு சக்கரங்களும் சுழலும் வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
