திருமலை: இந்தியாவின் 77வது குடியரசு தினம் இன்று திருப்பதியில் உள்ள தேவஸ்தான நிர்வாகக் அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. இதில் செயல் அதிகாரி அனில் குமார் சிங்கால் பேசுகையில் ஏழுமலையானி மகிமையை நாடு முழுவதும் பரப்பவும், தொலைதூர இடங்களிலிருந்து திருமலைக்கு வர முடியாத பக்தர்களின் வசதிக்காகவும், நாட்டின் அனைத்து மாநிலங்களின் தலைநகரங்களிலும் வெங்கடேஸ்வர சாமி கோயில்களைக் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, ஜூன் மாதத்திற்குள் நவி மும்பை மற்றும் மகாராஷ்டிராவில் பாந்த்ரா, கர்நாடகாவில் பெல்காம், அசாமில் குவஹாத்தி, பீகாரில் பாட்னா மற்றும் தமிழ்நாட்டில் கோயம்புத்தூரில் கோயில்களைக் கட்டுவதற்கான அடிக்கல்லை நாட்டி பணிகளைத் தொடங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். மாஸ்டர் பிளானின் ஒரு பகுதியாக, பக்தர்களின் வசதிக்காக 2018 ஆம் ஆண்டு அலிபிரி அருகே ஒரு மாஸ்டர் பிளான் தயாரிக்கப்பட்டது அதன்படி ரூ. 460 கோடி செலவில் நான்கு பிளாக்குகள் அமைக்கப்பட உள்ளது.
அதே பகுதியில் பக்தர்களின் வசதிக்காக அலிபிரியில் ஒரு டவுன்ஷிப் கட்டுவதற்கு தேவஸ்தான அறங்காவலர் குழு சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளது. திருமலை மலைகளில் வனப்பகுதியை அதிகரிக்கவும், பல்லுயிர் பெருக்கத்தை மீட்டெடுக்கவும், பசுமை வளர்ச்சியை மேம்படுத்தவும் 10 ஆண்டு செயல் திட்டத்துடன் நடவடிக்கை எடுத்து வருகிறோம். தேவஸ்தானத்தில் 3,000 புதிய சி.சி. கேமராக்களை நிறுவ நடவடிக்கை எடுத்துள்ளோம். கடந்த ஆண்டை விட நன்கொடை அளித்த நன்கொடையாளர்களின் எண்ணிக்கை 40 சதவீதம் அதிகரித்துள்ளது. டிஜிட்டல் கட்டணம் மூலம் தங்கள் நன்கொடைகளை வழங்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த ஏப்ரல் முதல் டிசம்பர் வரை 2,74,287 நன்கொடையாளர்கள் தேவஸ்தானத்தின் பல்வேறு அறக்கட்டளைகள் மற்றும் திட்டங்களுக்கு ரூ. 950 கோடி நன்கொடை அளித்துள்ளனர்.
இதேபோல், திருமலையில் ஒரு பக்தர் 120 கிலோ தங்கமும், ரிலையன்ஸ் பிரதிநிதிகள் ரூ. 100 கோடியில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மெகா கிட்சன் அமைக்க முன்வந்துள்ளனர். கோயம்புத்தூரில் வெங்கடேஸ்வர சாமி கோயில் கட்டுமானத்திற்காக ரூ. 300 கோடியை வழங்க மற்றொரு பக்தர் ஒப்புக்கொண்டுள்ளார் என்றார்.
