தைப்பூசத்தையொட்டி சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் பால்குட ஊர்வலம்

தர்மபுரி, ஜன.29: தர்மபுரி குமாரசாமிபேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில், தைப்பூசத்தையொட்டி நேற்று ஏராளமான பக்தர்கள் பால்குட ஊர்வலம் மற்றும் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தர்மபுரி குமாரசாமி பேட்டையில், சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூச திருத்தேர் திருவிழா கடந்த 23ம் தேதி துவங்கியது. தொடர்ந்து 24ம் தேதி கொடியேற்றமும், தினமும் சுவாமி திருவீதி உலாவும் நடந்தது. நேற்று எஸ்வி ரோடு விநாயகர் கோயிலில் இருந்து, ஏராளமான பெண்கள் மற்றும் ஆண்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் விதமாக பால்குடம், பூ காவடிகள் எடுத்து ஊர்வலமாக சென்றனர்.

சுவாமிக்கு பால் அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்து விசேஷ பூஜைகள் நடைபெற்றன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழாவையொட்டி, அந்த பகுதியில் பல்வேறு இடங்களில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இரவு 10 மணிக்கு சுவாமி திருக்கல்யாணம் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி பொன்மயில் வாகனத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இன்று (29ம் தேதி) மாலை 5 மணிக்கு விநாயகர் ரத தேரோட்டம் நடக்கிறது. 30ம் தேதி காலை 7.30 மணிக்கு மேல் 9 மணிக்குள் பெண்களே வடம் பிடித்து இழுக்கும் திருத்தேர் திருவிழா நடக்கிறது.

Related Stories: