முதல் டி.20யில் நியூசிலாந்தை வீழ்த்திய இந்தியா; அபிஷேக்கின் உழைப்பு அவருக்கு வெற்றியை தேடித் தருகிறது: கேப்டன் சூர்யகுமார் பாராட்டு

 

நாக்பூர்: இந்தியா-நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையே 5 போட்டி கொண்ட டி.20 தொடரின் முதல் போட்டி நாக்பூரில் நேற்றிரவு நடந்தது. டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீசியது. முதலில் பேட்டிங் ஆடிய இந்தியா 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 238 ரன்கள் குவித்தது. அபிஷேக் சர்மா 35 பந்தில் 5 பவுண்டரி, 8 சிக்சருடன் 84, ரிங்கு சிங் நாட் அவுட்டாக 20 பந்தில் 44, கேப்டன் சூர்யகுமார் 32 ரன் அடித்தனர். பின்னர் 239 ரன் இலக்கை துரத்திய நியூசிலாந்து அணியில் பிலிப்ஸ் 78, மார்க் சாப்மேன் 39, டேரில் மிட்செல் 28 ரன் அடித்தனர். 20 ஓவரில் அந்த அணி 7 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் 48 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றிபெற்றது. இந்திய பவுலிங்கில் வருண் சக்ரவர்த்தி, ஷிவம் துபே தலா 2 விக்கெட் வீழ்த்தினர். அபிஷேக் சர்மா ஆட்டநாயகன் விருது பெற்றார். வெற்றிக்கு பின் இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் கூறியதாவது: இவ்வளவு பெரிய இலக்கை நிர்ணயிக்கும் போது நிச்சயம் அது பவுலர்களுக்கு நல்ல விஷயமாக இருக்கும். பவர் பிளேவில் 2 விக்கெட் இழந்த
பிறகும் இவ்வளவு பெரிய இலக்கை நிர்ணயித்தது மகிழ்ச்சியான விஷயம்.

தற்போது களமிறங்கியுள்ள காம்பினேஷன் உதவிகரமாக இருக்கிறது. இது சரியாக இருந்தது என்றால் அடுத்தடுத்த போட்டிகளில் அதையே தொடர்வோம். நான் பேட்டிங்கில் கொஞ்சம் நெருக்கடியான சூழலில் களமிறங்கினேன். இதுபோன்ற சூழலில் பல போட்டிகளில் விளையாடி இருக்கிறேன். கடந்த 2, 3 வாரங்களாக நல்ல பயிற்சியில் ஈடுபட்டு வந்தேன். இன்று ஆடுகளத்தில் விளையாடியது மகிழ்ச்சி. பீல்டிங்கில் சில கேட்ச்களை தவற விட்டோம். அதிலும் முன்னேற்றம் காண விரும்புகிறோம். அபிஷேக் ஷர்மா எப்போதும் போல் நன்றாக விளையாடி வருகிறார். அவர் களத்தில் விளையாடுவதை விட இந்த போட்டிக்காக அவர் எப்படி தயாராகி வருகிறார் என்பதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது. ஓட்டலில் இருந்தாலும் சரி, அணியின் பேருந்தில் இருந்தாலும் சரி. அவர் சின்ன, சின்ன விஷயங்களில் கூட கவனமாக இருப்பார். எப்போதும் கிரிக்கெட் பற்றியே யோசித்து கொண்டு இருப்பார். அதுதான் களத்தில் தெரிகிறது. களத்திற்கு வெளியே அவர் போடும் உழைப்புதான் அவருக்கு வெற்றியை தேடித் தருகிறது.

இவ்வாறு அவர் கூறினார். 2வது போட்டி ராய்ப்பூரில் நாளை நடக்கிறது. ஸ்லிப்பில் பீல்டிங் செய்வதை விரும்புகிறேன்! ஆட்டநாயகன் அபிஷேக் சர்மா கூறுகையில், ‘‘பந்தை சரியாக அடித்து, 200 மற்றும் அதற்கு மேற்பட்ட ‘ஸ்ட்ரைக் ரேட்டில்’ ஆட, அதற்கான உத்வேகத்துடன் தொடர்ந்து ஆட தீவிர பயிற்சி அவசியம். சிக்சர் அடிப்பது ஆபத்தான வியூகமாக தோன்றவில்லை. பவர் ப்ளேயில் முதல் பேட்ஸ்மேனாகக் களமிறங்குவதையே விரும்புகிறேன். முதல் 3-4 ஓவரில் ரன் குவித்து எதிரணி மீது ஆதிக்கம் செலுத்துவதை உறுதிப்படுத்துவதே தனது திட்டம். நான் வலிமையான வீரராக இல்லாததால், ‘ரேஞ்ச் ஹிட்டிங்’ செய்வதில்லை. மாறாக, சரியான ‘டைமிங்கை’ நம்பியே எனது ஆட்டம் அமைகிறது. நான் ஸ்லிப்பில் பீல்டிங் செய்வதை விரும்புகிறேன். திலீப் சாருடன் இணைந்து பயிற்சி செய்கிறேன்’’ என்றார்.

 

Related Stories: