அரசமைப்பு சட்ட நெறிகளை காலில் போட்டு மிதிப்பதா? ஆளுநருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம்

சென்னை: அரசமைப்பு சட்ட நெறிகளை காலில் போட்டு மிதிப்பதா என்று ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை: சட்டப்பேரவை கூட்ட தொடரில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையை வாசிக்காமல் வெளிநடப்பு செய்தது அரசமைப்புச் சட்டத்தையும், சட்டமன்ற மாண்புகளையும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களையும் அவமதித்த செயலாகக் கருதி அதை வன்மையாக கண்டிக்கின்றேன். ஆர்.என்.ரவி உடனடியாக அப்பொறுப்பிலிருந்து வெளியேற வேண்டும்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: மாநில அரசு தயாரித்துள்ள ஆளுநர் உரையில் கூறப்பட்டுள்ள தகவல்களை நீக்குவதுடன் தனது விருப்பம் போல கருத்துகளை சேர்ப்பதும் ஆளுநரின் வரம்பை மீறும் அரசமைப்பு சட்டத்திற்கு எதிரான செயலாகும். ஆர்.என். ரவியின் செயல்பாடு கடும் கண்டனத்துக்கு உரியதாகும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம்: அவையின் மரபுகளை மதித்து நடந்து கொள்வதுதான் ஆளுநருக்கு அழகே தவிர, அவையை அவமதிப்பது சரியல்ல. அரசியல் சாசன கடமையை வேண்டுமென்றே நிறைவேற்றாமல், தொடர்ந்து மாநில அரசுடன் ஒரு மோதல் போக்கை கடைபிடிக்கும் ஆளுநர் ராஜினாமா செய்ய வேண்டும்.

இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன்: ஆளுநர் மாளிகை, எதிர் கட்சியினரும் சொல்ல முடியாத, அடிப்படையும், ஆதாரமும் இல்லாத அரசியல் அவதூறுகளை அறிக்கையாக தொகுத்து வெளியிட்டிருப்பதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முழுமையாக நிராகரிக்கிறது. வன்மம் கொண்ட அறிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறது. அவர் ஆளுநர் பொறுப்பில் இருந்து விலக்க வேண்டும் என குடியரசு தலைவரை வலியுறுத்திக் கேட்டு கொள்கிறோம்.

புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி: தமிழக சட்டப்பேரவையில் இந்தாண்டும் உரையை வாசிக்காமல் ஆளுநர் வெளிநடப்பு செய்திருக்கிறார். இது மிகவும் தவறான செயல். அதற்கு ஆளுநர் நிபந்தனையின்றி தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். ஆளுநர் ரவி உடனடியாக தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துவிட்டு வீட்டுக்கு போக வேண்டும். இதுபோல, மமக தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, மனித நேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி, எஸ்டிபிஐ கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக், தமிழ்நாடு விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி தலைவர் பொன்குமார் உள்பட பல்வேறு கட்சி தலைவர்கள் ஆளுநர் ரவிக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Related Stories: