தூத்துக்குடி: தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக, பாஜ மற்றும் அன்புமணி தலைமையிலான பாமக, தமாகா, ஜெகன் மூர்த்தி தலைமையிலான புரட்சி பாரதம், ஐஜேகே உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியை உறுதி செய்துள்ளன. அதிமுக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடந்து உள்ளது. கடந்த முறை தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் தமாகா போட்டியிட்டது. கடந்த 5 ஆண்டுகளாக தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி, மாநகராட்சி பகுதியில் கனிமொழி எம்பி, அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் மேற்கொண்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகளால் மக்கள் மத்தியில், குறிப்பாக பெண்களிடம் அமைச்சர் கீதாஜீவனுக்கு நல்ல வரவேற்பு உள்ளது என்பதால், அதிமுக இம்முறையும் கூட்டணிக்கு தொகுதியை தாரை வார்த்து விடலாம் என்ற எண்ணத்தில் இருப்பதாக தெரிகிறது.
ஆனால், இம்முறை அதிமுக சார்பில் போட்டியிட வேண்டும் என்று நிர்வாகிகள் விருப்பம் தெரிவித்து உள்ளனர்.தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியை பொறுத்தவரை திமுகவில் அமைச்சர் கீதாஜீவன் போட்டியிடுவார் என்பதால், அதிமுகவில் வலுவான வேட்பாளரை நிறுத்த முயற்சி எடுத்து வருகின்றனர். இத்தொகுதியில் போட்டியிட அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாநில வர்த்தக அணி செயலாளருமான சி.த.செல்லபாண்டியன் கடும் முயற்சி எடுத்து வருகிறார். இவருக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் ஆதரவாளர்கள் கடும் சவாலாக உள்ளனர்.
குறிப்பாக மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவரும், மாவட்ட அண்ணா தொழிற்சங்க தலைவருமான சுதாகர், மாநில வழக்கறிஞர் அணி துணைச் செயலாளரும், தமிழ்நாடு- புதுச்சேரி பார்கவுன்சில் உறுப்பினருமான மைக்கேல் ஸ்டேனிஸ் பிரபு, முன்னாள் அரசு வழக்கறிஞர்கள் ஆண்ட்ரூ மணி, சுகந்தன் ஆதித்தன், முன்னாள் எம்எல்ஏ வி.பி.ஆர்.ரமேஷ், முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸி, கடந்த முறை மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வாய்ப்பை இழந்த சிவசாமி வேலுமணி, மாவட்ட சிறுபான்மைப்பிரிவு செயலளர் பிரபாகர், மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச்செயலாளர் மனுவேல்ராஜ் உள்ளிட்டோரும் சீட்டு கேட்டு அதிமுக தலைமைக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.
இவர்களில் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லபாண்டியன், சுதாகர், மைக்கேல் ஸ்டேனிஸ் பிரபு, ஆண்ட்ரூ மணி, கடந்தமுறை தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட சிவசாமி வேலுமணி ஆகியோரிடையே சீட்டு பெறுவதில் கடும் போட்டி இருந்து வருவதாக கூறப்படுகிறது. சி.த.செல்லபாண்டியனுக்கு சீட்டு கிடைத்தால் அவருக்கு எஸ்.பி.சண்முகநாதன் ஆதரவாளர்கள் எந்தளவிற்கு பணி செய்வார்கள் என்பது கேள்விக்குறியாக உள்ளதால் அதிமுக தலைமை, வேட்பாளரை தேர்வு செய்வதில் குழப்பமடைந்துள்ளதாக தெரிகிறது. இருவரும் மாஜி அமைச்சர்கள் என்பதால் யார் கை ஓங்கும் என்ற பலத்தை பார்க்க சி.த.செல்லப்பாண்டியன் தான் போட்டியிடவும், எஸ்பி சண்முகநாதன் தனது ஆதரவாளரை களமிறக்கவும் தீவிரமாக முயன்று வருகின்றனர். இதனால் தூத்துக்குடி அதிமுகவில் கடும் போட்டி நிலவுகிறது.
