பொங்கல் முடிந்தும் ஆள்பிடித்து வரவில்லை; செங்கோட்டையன் மீது விஜய் கடும் அதிருப்தி

திருச்சி: பொங்கல் முடிந்தும் அதிமுகவில் இருந்து ஆள்பிடித்து வரவில்லை என்பதால், செங்கோட்டையன் மீது விஜய் கடும் அதிருப்தியில் உள்ளார். பணம் வாங்கியும் காரியத்தை சாதிக்காததால் அதிமுக தலைகளை தூக்க நேரடி களத்தில் விஜய்யே குதித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நடிகர் விஜய், தமிழக வெற்றி கழகத்தை துவக்கி விக்கிரவாண்டி, மதுரையில் பிரமாண்டமாக மாநாடு நடத்தினார். இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தை துவக்கினார். கரூரில் கடந்த ெசப்டம்பர் 27ம் தேதி பிரசாரம் மேற்கொண்ட போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் பலியாகினர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்காக டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விஜய் 2 முறை ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார்.

தவெகவில் விஜய் மட்டுமே பிரபலமான நபர். மற்றவர்கள் மக்களிடம் அறிமுகமில்லாதவர்கள். எனவே தேர்தலை சந்திக்க மாற்றுக்கட்சிகளை சேர்ந்த பிரபலமானவர்கள் தேவை என்று விஜய் கருதினார். இதற்காக மாற்று கட்சியினரை இழுக்கும் படலம் தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக எடப்பாடி பழனிசாமியுடன் ஏற்பட்ட மோதலால் அதிமுகவில் இருந்து விலகி கொங்கு மண்டலத்ைத சேர்ந்த மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் கடந்த நவ. 27ம்தேதி தவெகவில் இணைந்தார். அவருக்கு உயர் மட்ட மாநில குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய 4 மாவட்ட அமைப்பு செயலாளர் ஆகிய பொறுப்புகள் வழங்கப்பட்டன. இவர் எம்ஜிஆர் காலத்து அரசியல்வாதி. எனவே இவரை பின் தொடர்ந்து, அதிமுகவில் உள்ள மேலும் பல 2ம் கட்ட தலைவர்கள் தவெகவில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. செங்கோட்டையனும் இதை உறுதிப்படுத்தி இருந்தார்.

அதிமுக முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பலர் என்னுடன் பேசி வருகிறார்கள். பொங்கலுக்குள் அவர்கள் தவெகவில் இணைவார்கள் என்று செங்கோட்டையன் கூறி இருந்தார். இதற்காக ஒரு பெரிய தொகையே செங்கோட்டையனிடம் விஜய் கொடுத்துள்ளாராம். ஆனால் செங்கோட்டையன் சொன்னபடி, அதிமுகவின் 2ம் கட்ட தலைவர்கள் யாரும், தவெகவில் இணைய முன்வரவில்லை. கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட சிலர் மட்டும் தவெகவுக்கு வந்தனர். இதனால் விஜய் செங்கோட்டையன் மீது கடும் அதிருப்தியில் இருந்து வருவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து, தவெக முக்கிய நிர்வாகிகள் கூறியதாவது: தவெகவில் இணைந்தபோது சீனியர் என்கிற அடிப்படையில் செங்கோட்டையன் மீது விஜய் அதிக நம்பிக்கையில் இருந்தார். இவருக்கு தேவையான அனைத்தையும் விஜய் செய்து கொடுத்துள்ளார். இருப்பினும் அதிமுகவில் இருந்து முக்கிய நிர்வாகிகளை செங்கோட்டையனால் இழுத்து வர முடியவில்லை. இதுதொடர்பாக விஜய் கேட்கும்போதெல்லாம், அதிமுகவில் முக்கிய நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறேன். பொங்கலுக்குள் அவர்கள் வந்து விடுவார்கள் என்ற பதிலை மட்டுமே செங்கோட்டையன் கூறி வந்தார். பொங்கலும் முடிந்து விட்டது. ஆனால் அதிமுவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் யாரும் வரவில்லை. இதனால் செங்கோட்டையன் மீது நம்பிக்கை இழந்துள்ள விஜய், வேறு நபர்கள் மூலம் அதிமுகவில் அதிருப்தியில் உள்ள தலைவர்களை இழுக்கும் படலத்தை தொடங்கியுள்ளார். மேலும் மாற்று கட்சிகளில் இருந்து வருவோருக்கு செல்வாக்கை பொறுத்து அவர்களுக்கு பணம் மற்றும் தேர்தலில் சீட் தரவும் விஜய் முடிவு செய்துள்ளார்’ என தெரிவித்தனர்.

செங்ஸ் ஆதரவாளர்கள் குமுறல்; செங்கோட்டையன் ஆதரவாளர்கள் கூறுகையில், ‘‘செங்கோட்டையன் 9 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், 3 ஆட்சிகளில் அமைச்சராகவும் இருந்ததால், விஜய்க்கு அடுத்த நிலை பொறுப்புகள் வழங்கப்படும் என எதிர்பார்த்திருந்தார். ஆனால், ஒரே ஒரு முறை மட்டுமே புதுச்சேரியில் உள்ள புஸ்ஸி தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்த ஆனந்த், தேர்தலில் போட்டியிடாத ஆதவ் அர்ஜூனா, அருண்ராஜ் ஆகியோருக்கு அடுத்த நிலையில் உள்ள பொறுப்பு வழங்கப்பட்டதால், அரசியலில் சீனியரான செங்கோட்டையன் அதிருப்தி அடைந்தார். ஈரோட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, அருண்ராஜ் ஆகியோருக்கு முன்னதாகவே செங்கோட்டையன் பேச வைக்கப்பட்டது, அவருக்கு கட்சியில் அளிக்கப்பட்டுள்ள 4வது நிலையை எடுத்துக்காட்டுவதாக இருந்தது. தவெக தேர்தல் பிரசாரக் குழுவிலும் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜீனா ஆகியோருக்கு அடுத்த இடத்திலேயே தேர்தல் அரசியலில் பழுத்த அனுபவம் வாய்ந்த செங்கோட்டையனுக்கு இடமளிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி செங்கோட்டையனுடன் தவெகவில் இணைந்த தனது ஆதரவாளர்களுக்கு கட்சியில் பொறுப்பு அளிக்க வேண்டும் என பட்டியல் வழங்கினார். ஆனால் யாருக்கும் பொறுப்பு வழங்கவில்லை. இதனால், செங்கோட்டையன் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக விஜய்யை சந்திக்க முயன்று செங்கோட்டையனால் முடியவில்லை. தொடர்ந்து அவமானம், அவமதிப்பு செய்ததால் விரைவில் நல்ல முடிவை செங்கோட்டையன் எடுக்க உள்ளார்’ என்றனர்.

Related Stories: