சென்னை: காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவரும், கிள்ளியூர் தொகுதி எம்எல்ஏவுமான ராஜேஷ் குமார் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இந்திய அரசியலமைப்பை மதிக்காமல் தொடர்ந்து மூன்றாவது முறையாக தேசிய கீதம் ஆரம்பத்திலேயே ஒலிக்கப்படவில்லை என சொல்லி வெளிநடப்பு செய்து சட்டசபையின் மாண்பை, மரபுகளை குலைத்திருக்கிறார். இத்தகைய ஜனநாயகத்திற்கு எதிரான ஆளுநரின் செயலை வன்மையாக கண்டிக்கிறேன்.
தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக அரசு நிகழ்வுகள், பொது நிகழ்ச்சிகள் தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கி, தேசிய கீதத்துடன் நிறைவடைவது தான் வழக்கம். இதை மாற்ற நினைப்பது தமிழக மக்களின் உணர்வுகளை புண்படுத்துவதோடு அரசியல் சட்டத்திற்கு எதிரானது.
ஆளுநரின் உரை என்பது மாநில அரசின் கொள்கைகள், திட்டங்கள், மக்களின் எதிர்பார்ப்புகளை உள்ளடக்கியது. தமிழக அரசின் சிறப்பான மகத்தான திட்டங்கள் என்ன என்பது மக்களை சென்றடைய கூடாது என்பதற்காகவே அரசியல் உள்நோக்கத்தோடு தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆளுநர் உரையை வாசிக்க மறுத்து வெளிநடப்பு செய்தது அரசியல் சாசனத்திற்கு எதிரானது மட்டுமல்லாமல் இந்திய கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானதாக அமைந்துள்ளது.
