சென்னை: குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: ஆளுநர் எவ்வித ஆதாரம் இன்றியும், புள்ளிவிவரங்கள் இல்லாமலும் தமிழகத்தில் உள்ள எம்எஸ்எம்இ நிறுவனங்களையும், தமிழ்நாடு அரசையும் அவமதிக்கும் வகையில் அவதூறுகளை அள்ளி வீசியுள்ளார். நேற்று வரை நாட்டில் 4,51,01,634 (45 மில்லியன்) எம்எஸ்எம்இ நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது என ஒன்றிய அரசின் எம்எஸ்எம்இ துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், ஆளுநர் 55 மில்லியன் எம்எஸ்எம்இ நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது என எதை வைத்து கூறுகிறார் என தெரியவில்லை.
திமுக அரசு பொறுப்பேற்ற கடந்த நான்கரை ஆண்டுகளில், ரூ.2,407.97 கோடி மானியத்துடன், ரூ.6,200.16 கோடி வங்கி கடனுதவி வழங்கப்பட்டு, 80,169 இளைஞர்கள் தொழில்முனைவோர்களாக உருவாக்கப்பட்டு, அதன்மூலம் சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கடன் உத்தரவாதத் திட்டத்தின் கீழ் 43,056 தொழில் முனைவோர்களின் ரூ.7,894 கோடி கடனுக்கு, தமிழ்நாடு அரசு ரூ.750.74 கோடி கடன் உத்தரவாதம் வழங்கி உள்ளது. எம்எஸ்எம்இ திட்டத்தினை தமிழ்நாடு சிறப்பாக செயல்படுத்தியமைக்காக குடியரசு தலைவர் விருது வழங்கி பாராட்டியுள்ளார். ஒன்றிய அரசு வெளியிட்ட தர வரிசை பட்டியலில்-Start up-T* நிறுவனம் இந்திய அளவில் முதலிடம் பிடித்து சிறந்த செயற்பாட்டாளர் என்ற விருதினை பெற்றுள்ளது.
இந்தியாவிலேயே தமிழ்நாடு இரட்டை இலக்க வளர்ச்சியான 11.19 சதவீதம் பெற்று முதல் இடத்தில் உள்ளது. தமிழ்நாட்டின் ஆளுநராக இருந்து கொண்டே தமிழ்நாட்டின் வளர்ச்சியை அறியாமல் ஒரு எதிர்க்கட்சி தலைவர் போல் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு அறிக்கை வெளியிடுவது ஆச்சரியமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
