பேரவையை விட்டு வெளியேறிய சில நிமிடங்களில் ஆளுநர் மாளிகை செய்திக்குறிப்பு… ஒன்றியத்தில் இருந்து ஸ்கிரிப்ட் முந்தைய நாளே ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு வந்துவிட்டதா? ஆர்.எஸ்.பாரதி பேட்டி

சென்னை: ஆளுநர் சட்டமன்றத்தை விட்டு வெளியேறிய சில நிமிடத்தில் ஆளுநர் மாளிகை செய்திக் குறிப்பு வெளியிடுகிறது என்றால் ஒன்றியத்திலிருந்து ஸ்கிரிப்ட் முந்தைய நாளே வந்துவிட்டதா? என்றும், பிரதமர் மோடி பங்கேற்ற விழாவிலேயே தேசிய கீதம் மறுக்கப்பட்ட போது ஆளுநரின் இதயம் ஏன் துடிக்கவில்லை என்றும் சரமாரி கேள்வி எழுப்பி திமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நேற்று வெளியிட்ட அறிக்கை: ஆளுநர் ரவி தமிழ்நாட்டிற்கு வந்த பிறகு தொடர்ச்சியான அவருடைய சட்டமன்ற உரைகளைப் பார்த்தாலே அரசியல் செய்யத்தான் வந்திருக்கிறார் என்பது புரியும். இப்போதும் அதே பல்லவிதான். 2022ல் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடிய போது ஏற்றுக்கொண்ட ஆளுநர் ரவி, 2024க்கு பிறகு சண்டித்தனம் செய்வதற்குக் காரணம் அரசியல். ஆளுநர் ரவி ஆளுநராக வந்த போது தனது உரையை முழுமையாகப் படித்தவர், அடுத்தடுத்த ஆண்டுகளில் சாக்குப்போக்கு சொல்லிப் பேச மறுத்ததற்கு காரணம் என்ன? என்பதை மக்கள் அறிவார்கள்.

தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும் இறுதியில் தேசிய கீதம் பாடப்படுவதுதான் தமிழ்நாடு சட்டமன்றத்தின் மரபு. 2022ல் ஏற்றுக் கொண்ட ஆளுநர் ரவி, பிறகு ஏன் பல்டி அடித்ததற்கான காரணத்தைச் சொல்லுவாரா? பாஜ ஆளும் மாநிலங்களில் பாஜவின் சித்தாந்தங்களை அப்படியே உரையில் ஆளுநர்கள் வார்த்தெடுப்பார்கள். பாஜ அல்லாத மாநிலங்கள் என்றால் எதிர்ப்பு காட்டுவார்கள். பிரதமர் மோடி பங்கேற்ற மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா 2019ம் ஆண்டு இதே ஜனவரியில் நடைபெற்ற போது நிகழ்ந்த சம்பவம் ஆளுநர் ரவிக்கு நினைவிருக்கிறதா? பிரதமர் மோடி பங்கேற்ற அந்த விழாவில் வழக்கத்துக்கு மாறாகத் தேசிய கீதம் பாடப்படவில்லை.

பிரதமர் மோடி பங்கேற்ற விழாவிலேயே தேசிய கீதம் மறுக்கப்பட்ட போது ஆளுநர் ரவியின் இதயம் ஏன் துடிக்கவில்லை? தமிழகச் சட்டமன்றத்தில் ஆளுநர் உரையின் போது இறுதியில்தான் தேசிய கீதம் பாடப்படும். ஆனால், தேசிய கீதத்தைப் புறக்கணித்துவிட்டது போல ஒரு பொய்த் தோற்றத்தை ஏற்படுத்த அரசியல்வாதியைப் போல ஆளுநர் ரவி முயல்கிறார். தேசிய கீதத்தில் வரும் திராவிட வார்த்தையைக் கேட்க விரும்பாமல் போயிருப்பார் போல. சட்ட விதிகளையும் மரபுகளையும் செயல்படுத்துவதில் முன்னோடியாக இருக்கும் ஆளுநரே, அதனையெல்லாம் மீறிச் செயல்பட்டிருப்பது இந்தியாவில் எந்தச் சட்டமன்றத்திலும் நடக்காத நிகழ்வு.

‘‘சட்டப்பேரவையில் பேச அனுமதிக்கவில்லை; ஆளுநரின் மைக் தொடர்ந்து அணைக்கப்பட்டது; சட்டப்பேரவையில் தேசிய கீதம் மீண்டும் அவமதிக்கப்பட்டுள்ளது’’ என்றெல்லாம் பேசுவது எதிர்க்கட்சிகள் அல்ல; ஆளுநர் ரவி என்பது ஆளுநர் மாளிகைக்கே இழுக்கு. ஒன்றிய அரசின் பிரதிநிதியாக இருக்க வேண்டிய ஆளுநர், பாஜவின் பிரதிநிதியாகச் சட்டமன்றத்திற்குள் நுழைகிறார். ஏற்கனவே நான்கு பேர் பாஜ சார்பில் சட்டமன்ற உறுப்பினர்களாக இருக்கும் போது அவர்களுக்குப் போட்டியாக அவர்களின் குரலையே பேச ஆளுநர் பதவி தேவையில்லை! எம்.எல்.ஏ ஆகி சட்டமன்றத்திற்குள் ரவி வந்து, கருத்து சொல்லியிருக்கலாம்.

அதற்கு ஏன் ஆளுநர் ஆடையை தரித்து வந்திருக்க வேண்டும்? மக்கள் பவனுக்குள் கமலாலயத்தின் குரல்கள் ஏன் கேட்க வேண்டும்? ஆளுநரே. அரசியல் செய்வதாக இருந்தால் மக்கள் பவனுக்குள் இருந்து செய்யாமல், கமலாலயத்திற்குச் சென்று செய்யுங்கள். ராஜ்பவன் பெயரை மக்கள் பவன் என மாற்றினால் மட்டும் போதுமா? பெரும்பான்மை மக்களின் குரலை எதிரொலிக்க வேண்டாமா? ’அரசியலமைப்பு கடமை அலட்சியம் செய்யப்பட்டுள்ளது’ என்கிறது ஆளுநர் மாளிகை. மாநில அரசின் உரையைத்தான் ஆளுநர்கள் படிக்க வேண்டும் என்பதும் அரசியலமைப்பு கடமைதான். அதனை அலட்சியம் செய்துவிட்டு, அரசியலமைப்பு பற்றியெல்லாம் பாடம் எடுக்க ஆளுநருக்கு அருகதை இல்லை.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், தலித்துகள் மீதான தாக்குதல், போதைப் பொருட்கள் பற்றியெல்லாம் ராஜ்பவன் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. கொஞ்சமும் வெட்கப்பட மாட்டீர்களா ஆளுநரே. தமிழ்நாடு பாஜ தலைவர் நயினார் நாகேந்திரனுடன் போட்டி போடுவதற்கு எதற்கு ஆளுநர் பதவி? கமலாலயத்தின் ஒரு மூளையிலேயே ஆளுநர் மாளிகையை நடத்திக் கொள்ளலாமே! கிண்டியில் உள்ள ராஜ்பவனின் 156 ஏக்கர் பரப்பளவு இடமாவது மிச்சமாகுமே. ஆளுநர் சட்டமன்றத்தை விட்டு வெளியேறிய சில நிமிடங்களிலேயே ஆளுநர் மாளிகை செய்திக் குறிப்பு வெளியிடுகிறது என்றால், ஒன்றியத்தில் இருந்து ஸ்கிரிப்ட் முந்தைய நாளே வந்துவிட்டதா?

ஆளுநர் திட்டமிட்டு செயல்படுகிறார் என்பது அவருடைய நடவடிக்கைகள் அப்பட்டமாக வெளிக் காட்டுகின்றன. ஒன்றிய அரசின் பிரதிநிதியாக இருக்க வேண்டிய ஆளுநர் பாஜவின் பிரதிநிதியாக வருகிறார். ஆளுநருக்கு அரசியல் ஆசை இருந்தால், பதவியை ராஜினாமா செய்துவிட்டு வந்து தேர்தலில் வென்று அரசியல் செய்யட்டும். ஆளுநர் உரை எனும் நடைமுறையை நீக்க முதல்வர் இன்று சூளுரைத்துள்ளார்; இனி இந்தக் குரல் இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒலிக்கும், ஆளுநர்களின் அத்துமீறலை ஒழிக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: