முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையி் நடந்த திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
* திராவிட மாடல் அரசின் சாதனைத் திட்டங்களைப் பெண்களிடம் எடுத்துக்கூறி மகளிரின் முழுமையான ஆதரவு திமுகவிற்கு மட்டுமே என்ற நிலையை உறுதி செய்திட வேண்டும் என மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தீர்மானிக்கிறது. பிப்ரவரி 1ம் தேதி தொடங்கி மார்ச் 8ம் தேதி வரைக்கும் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் 10 மகளிர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்கள் மூலம் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு உட்பட்ட வீடுகளில் வீடு வீடாகப் பரப்புரை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், அப்போது திமுக அரசின் மகளிர் நலத்திட்டங்களை எடுத்துக்கூறியும், சாதனைத் திட்டங்களின் துண்டு பிரசுரங்கள் வழங்கியும் மக்களிடம் திமுகவிற்கான ஆதரவைத் திரட்டிட வேண்டும் எனவும், இந்த பரப்புரை மூலம் பெண்கள் வாக்கு சிந்தாமல் சிதறாமல் திமுகவிற்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
* பிப்.1 முதல் பிப்ரவரி-28 வரை தமிழ்நாடு முழுவதும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ‘தமிழ்நாடு தலைகுனியாது’ பரப்புரையை மேற்கொள்ளும் வகையில் நட்சத்திர பரப்புரையாளர்களை தேர்ந்தெடுத்து தலைமைக்கழகம் அனுப்பி வைத்திட வேண்டும் என மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
* திமுக இளைஞரணிச் செயலாளர், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் 14.12.2025 அன்று திருவண்ணாமலையில் வெற்றிகரமாக நடைபெற்ற வடக்கு மண்டல இளைஞரணி சந்திப்பை தொடர்ந்து, பிப்ரவரி 7ல் விருதுநகரில் தென் மண்டல இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு நடைபெற உள்ளது. இதனையடுத்து திமுக வாக்குச்சாவடி நிலை முகவர்கள் (பிஎல்ஏ-2), 100 வாக்காளர்களுக்கு ஒருவர் என நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி குழு உறுப்பினர்கள் (பிஎல்சி) மற்றும் வாக்குச்சாவடி டிஜிட்டல் முகவர்கள் (பிடிஏ) ஆகியோரை தேர்தல் பணிக்கு முழுமையாகத் தயார் செய்யும் வகையில் ‘‘என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி’’- வாக்குச்சாவடிக் குழுவினருக்கான பயிற்சி மாநாடுகளை நான்கு மண்டலங்களில் நடத்திட இக்கூட்டம் தீர்மானிக்கிறது. அதன்படி பிப்ரவரி-11 அன்று சென்னை மற்றும் விழுப்புரம் மண்டலங்களுக்கான மாநாட்டை தாம்பரம்-படப்பையிலும், பிப்ரவரி-14 அன்று வடக்கு மண்டலம் மாநாட்டை திருப்பத்தூரிலும், பிப்ரவரி-21 அன்று தெற்கு மண்டலம் மாநாட்டை மதுரையிலும், பிப்ரவரி-27 அன்று மேற்கு மண்டலத்திற்கான மாநாட்டை கோவையிலும் நடத்திட மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தீர்மானிக்கிறது.
* மார்ச் 8 அன்று திருச்சியில் 10 லட்சம் திமுகவினர் கலந்து கொள்ளும் ‘ஸ்டாலின் தொடரட்டும்; தமிழ்நாடு வெல்லட்டும்’ மாநில மாநாட்டை நடத்துவதுதென மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தீர்மானிக்கிறது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
