ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, பெருந்துறை, மொடக்குறிச்சி, பவானி, அந்தியூர், கோபி, பவானிசாகர் ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில், ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த 2021 தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக கை சின்னத்தில் திருமகன் ஈவெராவும், அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக இரட்டை இலை சின்னத்தில் யுவராஜாவும் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் திருமகன் ஈவெரா வெற்றி பெற்றார். உடல்நலக்குறைவால் திருமகன் ஈவெரா மறைந்ததையடுத்து 2023 இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக திருமகன் ஈவெராவின் தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக வேட்பாளராக தென்னரசு ஆகியோர் போட்டியிட்டனர். இந்த இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவன் 66,233 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தொடர்ந்து, ஈவிகேஎஸ் இளங்கோவன் எம்எல்ஏ மறைவுக்கு பின் கடந்த 2025ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக சந்திரகுமார் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இந்நிலையில், வருகின்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் தமாகாவுக்கு மீண்டும் ஈரோடு கிழக்கு தொகுதி ஒதுக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், ஏற்கனவே கிழக்கு தொகுதியில் தோல்வியுற்ற தமாகா பொதுசெயலாளர் யுவராஜா, நான் தான் வேட்பாளர் என கூறி வருவதோடு கிழக்கு தொகுதியில் எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் குறித்து துண்டு பிரசுரங்களை தேர்தல் வாக்குறுதிபோல வீடு, வீடாக சென்று விநியோகித்து வருகிறார். இதுவரை தொகுதி பங்கீட்டில் தொகுதி ஒதுக்கவில்லை. வேட்பாளரும் அறிவிக்கவில்லை. ஆனால், அதற்குள் யுவராஜா தன்னை வேட்பாளராக கருதிக்கொண்டு துண்டு பிரசுரம் விநியோகிப்பது எந்த வகையில் நியாயம் என அதிமுக.வினர் கொந்தளித்து வருகின்றனர். கடந்த முறை தொகுதியை விட்டுக்கொடுத்தது போல இந்த முறையும் தமாகாவிற்கு விட்டுக்கொடுக்க முடியாது என்றும், அதையும் மீறி தொகுதி ஒதுக்கப்பட்டால் நிச்சயம் தகுந்த பாடம் புகட்டப்படும் என்று அதிமுவினர் காத்திருக்கின்றனர்.
