சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்திற்கு பின்னர் அமைச்சர் ரகுபதி நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக அரசு தயாரித்துக் கொடுத்த உரையைப் படிக்குமாறு ஆளுநரிடம் மிகவும் தாழ்மையுடன் பேரவைத் தலைவர் அப்பாவு கேட்டுக் கொண்டார். ஆனால், அதனை வாசிக்காமல் ஆளுநர் வெளியேறிவிட்டார். பின்னர், ஆளுநர் மாளிகையில் இருந்து அறிக்கை வெளியிட்டுள்ளார். மைக் அணைக்கப்பட்டதாக அவர் தெரிவித்திருக்கிறார். ஆனால் எந்த மைக்கும் அணைக்கப்படவில்லை. அணைக்க வேண்டிய அவசியமும் எங்களுக்கு கிடையாது. தமிழக பொருளாதார வளர்ச்சி இரட்டை இலக்கத்தில் உள்ளது என்பதை ஒன்றிய அரசே ஒத்துக்கொண்டுள்ளது. ஆளுநர் கூறியிருப்பது பொய் என்பதற்கு ஒன்றிய அரசின் புள்ளிவிவரங்களே சாட்சி.
ஆளுநர் வெளியே சென்ற 10 நிமிடத்தில் மூன்று பக்கத்திற்கு அறிக்கை வந்திருக்கிறது. எனவே இது திட்டமிட்டு முன்பே தயாரிக்கப்பட்டதுதான். பெண்களுக்கு தைரியங்களை வரவழைத்து, எந்த குற்றம் உங்களுக்கு எதிராக இருந்தாலும், அந்த குற்றத்திற்கு எதிராக பரிகாரம் தேட காவல் நிலையங்களுக்கு சென்று நாடுங்கள், அதுதான் உங்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும் என்ற வலியுறுத்தலை அரசாங்கம் செய்து கொண்டிருக்கிறது. உங்களுக்கு தவறு என்று இருந்தால் உடனடியாக சென்று புகார் கொடுங்கள் என்று சொல்லி இருக்கிறார். போதைப்பொருள் தமிழ்நாட்டில் உற்பத்தியே கிடையாது. எந்த மாநிலங்களில் இருந்து அதை அனுமதிக்கிறார்கள் எவ்வளவு கோடி லாபம் சம்பாதித்துக் கொண்டு அனுமதிக்கிறார்கள். ஏன் நிகழ் அனுமதிக்கிறீர்கள்? ஒன்றிய அரசு எப்படி போதைப் பொருளை வரவிடுகிறது.
அதை முதலில் நீங்கள் கேளுங்கள். 18 தரம் உயர்ந்த பல்கலைக்கழகங்கள் இருக்கக்கூடிய மாநிலம் தமிழ்நாடு, உயர்கல்வி படிக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகம் இருக்கக்கூடிய மாநிலம் தமிழ்நாடு, அப்போது எப்படி இங்கு கல்வியின் தரம் தாழ்ந்திருக்கும், ஆட்சிக்கு வந்தவுடன் அனைத்து பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிக்கான தேர்தல்களை உடனடியாக நடத்திய அரசு மீதமுள்ள ஏழு, எட்டு மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல்களை நடத்திய அரசு, ஏன் பஞ்சாயத்து தேர்தல்களை கண்டு பயப்பட வேண்டும்? தமிழகம் இந்த ஐந்தாண்டு காலத்தில் முன்னேறி இருக்கிறது. இன்றைக்கு விவசாயத்தில், நெல் கொள்முதலில், பல லட்சம் டன் என்று முதலிடத்தில் வந்திருக்கிறோம். 11.19 சதவீதம் வளர்ச்சியை ஈட்டியிருக்கிறோம். எல்லா நல்ல திட்டங்களையும் தந்திருக்கும் முதலமைச்சர் சூப்பர் முதலமைச்சர் என்று அழைக்காமல் எப்படி அழைப்பது? குடியரசு தினத்தன்று ஆளுநரின் தேநீர் விருந்தில் தமிழ்நாடு அரசு கலந்துகொள்வது பற்றி முதலமைச்சர் முடிவு எடுப்பார். இவ்வாறு அவர் கூறினார்.
