புதுடெல்லி: உபி மாநிலம் பிரயாக்ராஜில் மகா மேளா நடைபெறு கிறது. இதில் பங்கேற்ற ஜோதீர் மடத்தின் சங்கராச்சாரியார் சுவாமி அவிமுக்தேஸ்வரானந்த் தனது சீடர்களுடன் நீராடுவதற்காக கங்கை ஆற்றின் படித்துறைக்கு சென்றார். அப்போது போலீசார் அவரை தடுத்து நிறுத்தினார்கள். பின்னர் அவர் நீராடாமல் திரும்பிச்சென்றார். போலீஸ் நடவடிக்கைக்கு எதிராக சங்கராச்சாரியார் உண்ணாவிரத போராட் டத்தில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து காங்கிரஸ் கட்சியின் ஊடகம் மற்றும் விளம்பரத் துறை தலைவர் பவன்கேரா டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது,”சங்கராச்சாரியார் சுவாமி அவிமுக்தேஸ்வரானந்த்ஜிக்கு இழைக்கப்பட்ட அவமதிப்பால் நாங்கள் வருத்தமடைந்துள்ளோம்.
இந்த சம்பவம் நடந்ததில் இருந்து சங்கராச்சாரியார் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். ஆனால் அரசில் உள்ள யாரும் இது குறித்து கவலைப்பட்டதாக தெரியவில்லை. அவிமுக்தேஸ்வரானந்த் சுவாமி தனக்கு அடிபணியாத ஒரே காரணத்திற்காக பிரதமர் மோடி அரசு தனது முழு சமூக ஊடகப் படையையும் அவருக்கு எதிராக ஏவிவிட்டுள்ளது. சங்கராச்சாரியார் சுவாமி அவிமுக்தேஸ்வரானந்த் செய்த குற்றம் என்ன? அவர் உங்களை புகழவில்லை. உங்களை கண்டிக்கிறார். மகா கும்பமேளாவில் நடந்த முறைகேடுகள் குறித்து கேள்விகளை எழுப்புகிறார்.” என்றார்.
