திருவனந்தபுரம்: சபரிமலையில் தற்போது இருப்பது உண்மையான தங்கம் தானா என்பதில் சந்தேகம் இருப்பதால் இன்று உடனடியாக சன்னிதானம் சென்று கோயிலில் மீண்டும் பரிசோதனை நடத்த சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கம் திருடப்பட்ட வழக்கில் கோயிலின் மூத்த தந்திரி கண்டரர் ராஜீவரர், திருவிதாங்கூர் தேவசம் போர்டின் 2 முன்னாள் தலைவர்கள் உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த 28 ஆண்டுகளுக்கு முன்பு தான் விஜய் மல்லையாவின் நிறுவனத்தின் சார்பில் சபரிமலை கோயிலில் தங்கத் தகடுகள் பதிக்கப்பட்டன. இதற்காக 30 கிலோவுக்கு மேல் தங்கமும், சுமார் 1800 கிலோ செம்பும் பயன்படுத்தப்பட்டது.
கோயிலின் பக்கச்சுவர்கள், கூரை, கதவு, நிலை, கோயிலின் முன் இருபுறங்களிலும் உள்ள 2 துவாரபாலகர் சிலைகள் ஆகியவற்றில் தங்கத் தகடுகள் பதிக்கப்பட்டன. இந்த தங்கம்தான் திருடப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன் இது தொடர்பான விசாரணை நடந்தபோது, சபரிமலையில் தற்போது இருக்கும் தங்கத் தகடுகள் ஏற்கனவே இருந்தது தானா என்பதில் சந்தேகம் இருப்பதாக உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. இந்த சந்தேகத்தை நிவர்த்தி செய்வதற்காக இது தொடர்பாக விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையம் விசாரணை நடத்த அப்போது உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி விக்ரம் சாராபாய் நிறுவன விஞ்ஞானிகள் விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர். அதில், சபரிமலை கோயிலில் இருந்து தங்கம் திருடப்பட்டது உண்மைதான் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிக்கையை கேரள உயர்நீதிமன்றம் நேற்று பரிசீலித்தது.
அப்போது உயர்நீதிமன்ற தேவசம் போர்டு அமர்வு கூறியது: சபரிமலையில் தற்போது உள்ள தங்கத் தகடுகள் ஒரிஜினல் தானா என்பதில் சந்தேகம் இருப்பதாக நாங்கள் ஏற்கனவே கூறினோம். இப்போது விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையம் தாக்கல் செய்துள்ள அறிக்கையின் மூலம் இந்த சந்தேகம் மேலும் வலுத்துள்ளது. சபரிமலையில் பெரும் கொள்ளை நடந்திருப்பது இதன் மூலம் நிரூபணமாகி உள்ளது. எனவே இது தொடர்பாக நாளையே (இன்று) சிறப்பு புலனாய்வுக் குழு சபரிமலை சென்று கோயிலில் பரிசோதனை நடத்த வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.
* வங்கி கணக்குகள் முடக்கம்
இதற்கிடையே சபரிமலை தங்கம் கடத்தல் வழக்கு தொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அனைவரது வங்கிக் கணக்குகளையும் முடக்குவதற்கு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
