பாஜ தேசிய தலைவர் தேர்தல் நிதின் நபின் போட்டியின்றி தேர்வு: இன்று பதவி ஏற்கிறார்

புதுடெல்லி: பாஜ தேசியத் தலைவராக உள்ள ஜேபி நட்டாவின் பதவிக்காலம் முடிந்து விட்டதால் புதிய தலைவர் தேர்வு நடைபெற்று வந்தது. இதற்கிடையே பீகார் அமைச்சர் நிதின்நபின் பா.ஜ தேசிய செயல் தலைவர் பதவியில் கடந்த மாதம் 14ஆம் தேதி நியமிக்கப்பட்டார். இந்நிலையில் பா.ஜ தேசிய தலைவர் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதற்கான மனுத்தாக்கல் நேற்று நடந்தது. இதில் செயல் தலைவர் நிதின் நபீனை ஆதரிக்கும் வகையில் அவரது வேட்பு மனுக்களை பாஜ மூத்த தலைவர்கள் பலர் நேற்று தேர்தலுக்கான அதிகாரியான கே. லட்சுமணிடம் வழங்கினார்கள்.

பாஜ தலைவர் ஜேபி நட்டா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் உள்துறை அமைச்சர் அமித் ஷா, சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் மூத்த தலைவர்களான தர்மேந்திர பிரதான், பூபேந்திர யாதவ், கிரண் ரிஜ்ஜூ ஆகியோர் நிதின் நபினின் வேட்பு மனுக்களின் தொகுப்பை தேர்தல் அதிகாரியிடம் வழங்கினார்கள். பா.ஜ முதல்வர்கள் யோகி ஆதித்யநாத், நயாப் சிங் சைனி, பெமா காண்டு மற்றும் பிரமோத் சாவந்த் ஆகியோரும் அப்போது உடன் இருந்தனர்.

பாஜ மூத்த தலைவரும் தேர்தல் அதிகாரியுமான கே. லட்சுமணன் இதுபற்றி கூறுகையில்,’ பாஜ தேசியத் தலைவராக நிதின் நபினுக்கு ஆதரவாக 37 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. பிரதமர் மோடி உள்பட மூத்த தலைவர்கள் நிதின் நபினின் வேட்புமனுவை முன்மொழிந்துள்ளனர்’ என்றார். நிதின் நபினை எதிர்த்து யாரும் மனுத்தாக்கல் செய்யாததால் அவர் போட்டியின்றி புதிய பா.ஜ தேசிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் இன்று புதிய தலைவராக பதவி ஏற்க உள்ளார். இதில் பிரதமர் மோடி உள்பட பா.ஜ மூத்த தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். பீகாரில் இருந்து 5 முறை எம்எல்ஏவாகவும், பீகார் பொதுப்பணித்துறை அமைச்சராகவும் பணியாற்றியவர் நிதின் நபின்.

மிகவும் இளம் வயது தலைவர்
* புதிய பா.ஜ தேசிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள நிதின்நபின் மிகவும் இளம் வயது தலைவராக மாறியுள்ளார்.
* 26 வயதில் எம்எல்ஏவாக தேர்வான இவர், தற்போது 45 வயதில் பா.ஜ தேசிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
* ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியை சேர்ந்த தீப்மாலா வஸ்தவாவை மணந்தார். தம்பதியருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.

* முந்தைய தலைவர்கள்
1980ல் பா.ஜ தொடங்கப்பட்ட போது வாஜ்பாய் முதல் பாஜ தலைவரானார். அவருக்குப் பிறகு 1986ல் அத்வானி மூன்று முறை அந்தப் பதவியை வகித்தார். முரளி மனோகர் ஜோஷி, குஷாபாவ் தாக்ரே, பங்காரு லக்ஷ்மன், ஜனா கிருஷ்ணமூர்த்தி, வெங்கையா நாயுடு, ராஜ்நாத் சிங் (இரண்டு முறை), நிதின் கட்கரி மற்றும் அமித் ஷா ஆகியோர் இப்பதவியை வகித்தவர்கள். நட்டா 2020 முதல் பா.ஜ தலைவர் பதவியை வகித்து வந்தார். தற்போது நிதின் நபின் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: