ஜாமீன் குறித்து பேச்சு முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட் மீது காங். தாக்கு: பாஜ வக்காலத்து

புதுடெல்லி: ஜெய்ப்பூரில் நேற்று முன் தினம் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட் பேசுகையில், ‘‘விரைவான விசாரணைக்கு சாத்தியமில்லாத போது, ஜாமீன் என்பது விதிமுறையாக இருக்க வேண்டுமே தவிர விதிவிலக்காக இருக்கக் கூடாது. தண்டனைக்கு முன்னரான ஜாமீன் ஒரு உரிமை’’ என கூறியிருந்தார். இது குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும் கட்சியின் சமூக ஊடக துறை தலைவருமான சுப்ரியா நேட் நேற்று தனது எக்ஸ் பதிவில், ‘‘ஜாமீன் உரிமை என இப்போது கூறும் மாஜி தலைமை நீதிபதி சந்திரசூட் அவரது பதவிக் காலத்தில் சரியானதை செய்வதிலிருந்து அவரை தடுத்தது எது? அவர் தலைமை நீதிபதியாக இருந்த காலத்தில் 2023ல் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் மனு (டெல்லி கலவர வழக்கில் உமர் காலித்தின் ஜாமீன் மனு) தாக்கல் செய்யப்பட்டது. அது 10 முறைக்கு மேல் ஒத்திவைக்கப்பட்டது. அந்த மனுவுக்கு என்ன கதி ஏற்படும் என்பதை அறிந்தே அதை நீதிபதி பேலா திரிவேதியின் அமர்வுக்கு சந்திரசூட் அனுப்பினார்’’ என்றார்.

இதை கண்டித்துள்ள பாஜ செய்தி தொடர்பாளர் ஷேசாத் பூனாவாலா, ‘‘வாக்கு வங்கி அரசியலுக்காக காங்கிரஸ் இப்போது உச்ச நீதிமன்றத்தின் ஞானத்தை கேள்வி கேட்கிறது. முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதி திரிவேதியை தாக்குகிறது. காங்கிரசுக்கு அம்பேத்கரின் அரசியலமைப்புச் சட்டம் பிடிக்காது. அவர்கள் பயங்கரவாதிகளை நேசிக்கிறார்கள். நக்சல்களுக்காக அழுகிறார்கள். அப்சல் யாகூபுக்காக அழுகிறார்கள்’’ என்றார்.
ஜெய்ப்பூர் விழாவிலேயே மூத்த பத்திரிகையாளர் வீர் சங்வி, உமர் காலித் விவகாரத்தை சந்திரசூட்டிடம் எழுப்பினார். அதற்கு சந்திரசூட், ‘‘குற்றம் நிரூபணமாவதற்கு முன் ஜாமீன் என்பது உரிமையாக இருக்க வேண்டும். நமது சட்டம் ஒரு அனுமானத்தின் அடிப்படையிலானது.

அந்த அனுமானம், குற்றம் நிரூபிக்கப்படும் வரை அனைவரும் நிரபராதிகளே என்பதாகும். ஏனென்றால், ஒருவர் 5 அல்லது 7 ஆண்டுகள் விசாரணை கைதியாக இருந்து, இறுதியில் நிரபராதி என்று நிரூபிக்கப்பட்டால், இழந்த வாழ்க்கையை எப்படி ஈடுசெய்வீர்கள்? குற்றம் சாட்டப்பட்டவர் மீண்டும் சமூகத்திற்குத் திரும்பி அதே குற்றத்தைச் செய்ய வாய்ப்பிருந்தால், ஆதாரங்களைத் திரிக்க வாய்ப்பிருந்தால் அல்லது ஜாமீனைப் பயன்படுத்தி சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க வாய்ப்பிருந்தால் ஜாமீன் மறுக்கப்படலாம். இந்த 3 காரணங்களும் இல்லாத பட்சத்தில், ஜாமீன் வழங்கப்பட வேண்டும். அதே சமயம், தேசிய பாதுகாப்பு சம்மந்தப்பட்ட இடங்களில், வழக்கை ஆழமாக ஆராய்வது நீதிமன்றத்தின் கடமை. அதன் காரணமாகத்தான் சிலர், பல ஆண்டுகளாக சிறையில் இருக்கிறார்கள்’’ என பதிலளித்தார்.

Related Stories: