நொய்டா: கிரேட்டர் நொய்டாவில் 50 அடி ஆழ தண்ணீர் நிரம்பிய பள்ளத்தில் கார் பாய்ந்து, இளம் இன்ஜினியர் பரிதாபமாக பலியானது தொடர்பாக மூத்த ஐஏஎஸ் அதிகாரி நீக்கப்பட்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள செக்டர்-150 பகுதியை சேர்ந்தவர் யுவராஜ் மேத்தா (27). மென்பொருள் பொறியாளர். இவர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு பணி முடிந்து காரில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். கிரேட்டர் நொய்டாவின் செக்டர்-150 அருகே வந்தபோது, யுவராஜ் கார் திடீரென கட்டுபாட்டை இழந்து கட்டுமான பணிக்காக தோண்டப்பட்டு, தண்ணீர் நிரம்பியிருந்த 50 அடி ஆழம் கொண்ட குழியில் பாய்ந்தது.
மிதந்து கொண்டிருந்த காரில் இருந்து போராடி வெளியே வந்த யுவராஜ், காரின் மேற்கூரை மீது ஏறி நின்று, தனது தந்தை ராஜ்குமார் மேத்தாவை செல்போனில் தொடர்பு கொண்டு, தன்னை காப்பாற்றும்படி கூறினார். தகவலறிந்து காவல் துறை, தீயணைப்பு படையினர் சிறிய, பெரிய கிரேன்களுடன் சம்பவ இடத்திற்கு சென்று, யுவராஜை மீட்க முயன்றனர். ஆனால், மீட்பு பணிக்கு தேவையான உபகரணங்கள் இல்லாததால், 2 மணி நேரம் தண்ணீரில் தத்தளித்த யுவராஜ் மீட்புக்குழு கண்ணெதிரிலேயே நீரில் மூழ்கி பரிதாபமாக பலியானார்.
இது தொடர்பாக, விபத்து நடந்த பகுதியின் போக்குவரத்து கண்காணிப்பு பிரிவை சேர்ந்த ஜூனியர் இன்ஜினியரை கிரேட்டர் நொய்டா ஆணையம் பணி நீக்கம் செய்துள்ளது. மேலும் 2 கட்டுமான நிறுவன உரிமையாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் நொய்டா ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான மூத்த ஐஏஎஸ் அதிகாரி லோகேஷ் என்பவரை பதவியில் இருந்து நீக்கி, அவரை காத்திருப்போர் பட்டியலில் வைக்க உபி அரசு உத்தரவிட்டுள்ளது.
