3 வீடு, 3 ஆட்டோ, ஒரு கார் இந்தூரில் சிக்கிய கோடீஸ்வர பிச்சைக்காரர்: வட்டிக்கு பணம் கொடுப்பதும் கண்டுபிடிப்பு

இந்தூர்: இந்தூரில் பிச்சைக்காரர் ஒருவருக்கு மூன்று வீடுகள், மூன்று ஆட்டோ, ஒரு கார் இருப்பதும், நகைக்கடைக்கு வட்டிக்கு பணம் கொடுப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மத்தியபிரதேச மாநிலம் இந்தூரின் சரபா பஜாரில் மங்கிலால் என்பவர் பிச்சை எடுத்து வருகிறார். தொழுநோயாளி. பிச்சை எடுப்பதை ஒழிப்பதற்கான பிரச்சாரத்தின் நோடல் அதிகாரியான தினேஷ் மிஸ்ரா என்பவர் மங்கிலாலை ஆய்வு செய்தார். அப்போது அவரிடம் 3 வீடுகள், 3 ஆட்டோ ரிக்‌ஷாக்கள், டிசையர் கார் இருப்பது தெரிய வந்தது.

மேலும் பிரபலமான தங்கச் சந்தையில் லட்சக்கணக்கில் வட்டிக்கு பணம் கொடுப்பதும் தெரிய வந்ததும் திகைத்துப் போனார்கள் அதிகாரிகள். 2021 முதல் பிச்சை எடுத்து வரும் அவர் இந்தூரில் உள்ள சந்தையில் உள்ளவர்களுக்கு ரூ.4-5 லட்சம் கடன் கொடுத்து, ஒரு நாளைக்கு ரூ.1,000-1,200 வரை வட்டி வசூலித்து வருகிறார். மேலும், அவர் தினமும் ரூ.400 முதல் ரூ.500 வரை பிச்சை பெறுகிறார். இந்தூர் ஒரு பிச்சைக்காரர்கள் இல்லாத நகரம் என்று அறிவிக்கப்பட்டாலும், மங்கிலால் அங்கு கோடீஸ்வர பிச்சைக்காரராக இருப்பது தெரிய வந்தது. தற்போது மங்கிலால் உஜ்ஜைனில் உள்ள சேவதம் ஆசிரமத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். அவரது வங்கிக் கணக்குகள் மற்றும் சொத்துக்கள் குறித்தும், கடன் பெற்றவர்கள் குறித்தும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories: