பீஜிங்: சீன பொருளாதாரம் 2025ல் 5 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது. முதல் முறையாக அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி 20 டிரில்லியன் டாலரை தொட்டுள்ளது. சீனாவின் 2025ம் ஆண்டுக்கான பொருளாதார வளர்ச்சி குறித்த விவரங்களை தேசிய புள்ளியியல் துறை நேற்று வெளியிட்டது. இதன்படி, சீனா 5 சதவீத பொருளாதார வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. அமெரிக்காவின் வரிகளுக்கு மத்தியிலும் வலுவான ஏற்றுமதியால், கணிக்கப்பட்ட வளர்ச்சி விகிதத்தை சீனா எட்டி உள்ளது. மேலும், அதன் ஜிடிபி முதல் முறையாக 20.01 டிரில்லியன் டாலரை (ரூ.1800 லட்சம் கோடி) தொட்டுள்ளது. ஆனால், பல உள்நாட்டு பின்னடைவுகளால் இறுதி காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 4.5 சதவீதமாக குறைந்திருந்தது. இது இறுதி காலாண்டில் கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத குறைவாகும். உற்பத்தி மற்றும் ஏற்றுமதிகள் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் அதே வேளையில் உள்நாட்டு நுகர்வு மந்தமாக இருப்பதாகவும் ரியல் எஸ்டேட் தொடர்ந்து சுமையாக இருப்பதாகவும் அரசு தரப்பு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
