திருச்செங்கோட்டில் பரபரப்பு பொங்கல் விழாவில் அரசியல் பேசக்கூடாது: தவெக நிர்வாகிக்கு எதிர்ப்பு

திருச்செங்கோடு: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தவெக கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ் நேற்று முன்தினம் வந்திருந்தார். அவர் திருச்செங்கோடு நகராட்சி 11வது வார்டு சின்னப்பாவடியில் நடந்த பொங்கல் விழா விளையாட்டுப் போட்டிகளில், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளித்தார். இந்நிகழ்ச்சியின்போது, மேடையில் விஜய்யை வருங்கால தமிழக முதல்வர் எனவும், உங்களுக்கு விஜய்யை எவ்வளவு பிடிக்கும் எனவும், பொதுமக்களிடம் கேள்விகள் எழுப்பிக் கொண்டிருந்தார்.

அப்போது, விழா குழு நிர்வாகி தனசேகர் என்பவர் திடீரென குறுக்கிட்டு, ‘‘பொங்கல் விழாவிற்கு வந்தால், பொங்கல் பற்றி மட்டும் பேசுங்கள். வேறு எதுவும் அரசியல் பேசக் கூடாது. அதற்கென தனி மேடை போட்டு பேசுங்கள். பொதுவான நிகழ்ச்சி நடக்கும் இடத்தில், உங்கள் கட்சி அரசியல் பற்றி பேச வேண்டாம்’’ என்றார். இதனால் அதிர்ச்சியடைந்த அருண்ராஜ், வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள் எனக்கூறி தனது பேச்சை முடித்தார். விஜய்யை பற்றி பேசிய தவெக நிர்வாகிக்கு பொது மேடையில் தடை போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

‘மதுக்கடைகள் இருக்கலாம்’
நிகழ்ச்சிக்கு பின் நிருபர்களை சந்தித்த அருண்ராஜிடம், ‘‘நீங்கள் ஆட்சிக்கு வந்தால், மதுக்கடைகளை அகற்றுவோம்’’ என தேர்தல் அறிக்கையில் குறிப்பிடுவீர்களா என நிருபர்கள் கேட்டனர். அப்போது அவர், ‘‘மதுக்கடைகள் இருக்கலாம் தவறில்லை, விற்பனையை அதிகப்படுத்த வேண்டும் என்று நோக்கத்தில் செயல்படுவது தான் தவறு என சுட்டிக் காட்டுகிறோம்’’ என்றார். பின்னர், ஜனநாயகன் பட விவகாரம் குறித்தும், தூத்துக்குடி அஜிதா பிரச்னை குறித்தும் விஜய் எந்த கருத்தும் சொல்லாமல் இருக்கிறாரே என கேட்டனர். அதற்கு பதில் சொல்வதை தவிர்த்து, பேட்டியை முடித்துக் கொண்டு சென்றார்.

Related Stories: