புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: திமுக அரசின் திட்டங்களை எடப்பாடி பழனிச்சாமி காபி பேஸ்ட் செய்து அறிவித்துள்ளார். கடந்த தேர்தலின் போது மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று கூறினோம். அப்போது எடப்பாடி பழனிச்சாமி குழந்தைகளுக்கு மிட்டாய் கொடுத்து படிப்பதை மகளிருக்கு ஆசை வார்த்தை கூறி உரிமைத்தொகை தர போகிறோம் என்று திமுக கூறியுள்ளது என்று சொன்ன வாய்தான் எடப்பாடி பழனிச்சாமியின் வாய். அவர் இன்று பொய்பாடி பழனிச்சாமியாக மாறி இருக்கிறார்.
உங்களால் உரிமைத்தொகை கொடுக்க முடியாது என்று கூறியவர் இன்று 2000 ரூபாய் கொடுக்க முடியும் என்று கூறியதில் இருந்தே மகளிருக்கு கொடுக்கும் ஆயிரம் ரூபாய் எந்த அளவிற்கு மகளிர் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்குள்ள வரவேற்பையும் எடுத்துக்காட்டி உள்ளது. அன்றைய தினம் மகளிருக்கு உரிமை தொகை கொடுக்க முடியாது என்று கூறிய எடப்பாடி பழனிசாமிக்கு இன்று கொடுக்க முடியும் என்ற நம்பிக்கையை கொடுத்துள்ளது திராவிட மடல் ஆட்சிக்கு கிடைத்துள்ள வெற்றி.
தேர்தல் வரவில்லை. தேர்தல் தேதி அறிவிக்கவில்லை. எப்போதும் தேர்தல் தேதி அறிவித்த பின்பு தான் தேர்தல் அறிக்கையை எந்த கட்சியும் வெளியிடும். இன்று அவசர, அவசரமாக பந்திக்கு முந்திக்கொண்டு செல்வதைப் போல தனக்கு எடை போட்டு வைத்திருப்பார்கள் என்ற எண்ணத்தில் எடப்பாடி பழனிச்சாமி ஓடிப் போய் உள்ளார். ஆனால் அங்கு பந்தியே போடவில்லை. அவர் காத்திருக்கத்தான் வேண்டும். பந்தி போட்டவுடன் நாங்கள் வந்து அமர்ந்து சாப்பிட்டு விட்டு சென்று விடுவோம்.
எடப்பாடியால் எந்த நிதி நிலையையும் சரி செய்ய முடியாது. எடப்பாடியின் திறமை என்ன என்பதை மக்கள் பார்த்துவிட்டார்கள். அவரால் திறமையாக எதையும் செயல்படுத்த முடியாது. ராகுல்காந்தி தான் கூட்டணி குறித்து அறிவிப்பார் என்று தெரிவித்துள்ளது கூட்டணிக்குள் எந்த குழப்பமும் ஏற்படாது. சிலர் எதிர்பார்க்கிறார்கள். அது நடக்காது. எங்களைப் பொறுத்தவரை நாங்கள் எங்கள் கூட்டணியை விட்டு யாரையும் அனுப்புவது கிடையாது. இந்த பழக்கமும் கிடையாது. அவர்களை அரவணைப்பது தான் தமிழ்நாடு முதலமைச்சர் பழக்கம். அவர்களை அரவணைத்து கொண்டு தான் இருக்கிறார்.
அந்த அரவணைப்பிலிருந்து யாராவது செல்ல வேண்டும் என்று நினைத்தால் நாங்கள் பொறுப்பாக முடியாது. எங்களைப் பொறுத்தவரை காங்கிரஸ் எங்களோடு இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்பதற்கு எங்கள் தலைவர் தெளிவான பதிலை சொல்லிவிட்டார். வரக்கூடிய தேர்தலில் கூட்டணி ஆட்சி தான் அமையும் என டிடிவி தினகரன் ஜாதகம் பார்த்து ஜோசியம் சொல்கிறார். யார் அந்த டிடிவி தினகரன். அவருக்கு அரசியலே தெரியாது. அவர் ஒன்றும் கூற முடியாது. நாங்கள் தனித்து ஆட்சி அமைக்க கூடிய அளவிற்கு வெற்றி பெறுவோம். நிச்சயம் திமுக தனித்து ஆட்சி அமைக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
* தமிழுக்கு முக்கியத்துவம் மோடி, அமித்ஷாவின் தேர்தல் அரசியல்
புதுக்கோட்டையில் அமைச்சர் சாமிநாதன் நேற்று அளித்த பேட்டி: மற்ற மாநிலத்தை விட தமிழ்நாடு அனைத்திலும் முன்னணி மாநிலமாக திகழ்ந்து வருகிறது. வரக்கூடிய ஐந்தாண்டு காலமும் சிறப்பான ஆட்சியாக அமையும். தமிழில் பெயர் பலகை என்பது முழுமையாக இன்னும் செயல்படுத்தவில்லை. தமிழ் வளர்ச்சித் துறையும் தொழிலாளர் நலத்துறை இணைந்து வணிகர்கள் சங்கத்திலும் அழைத்துப் பேசி உள்ளோம். அவர்கள் ஒத்துழைப்பு வழங்குகிறார்கள். சட்டப்படி என்பதை விட படிப்படியாக தமிழ் பெயர் பலகை வைக்க மனப்பூர்வமான சம்மதத்தை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதிலும் தமிழ் வளர்ச்சித் துறை வெற்றியடையும். தேர்தல் நேரத்தில் மோடி, அமித்ஷா தமிழுக்கு முக்கியத்துவம் கொடுப்பது அவர்களின் அரசியலாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
