பாஜவால் ஓட்டு கிடைக்காது: ஐயா… ப்ளீஸ் விட்டுடுங்க… எனக்கு சீட் வேண்டாம்! கெஞ்சும் அதிமுக எம்எல்ஏக்கள்

கோவை: கோவை மாவட்டத்தின் 10 சட்டமன்ற தொகுதிகளும் அதிமுக, பாஜ கூட்டணி வசம் இருக்கிறது. கடந்த 2021 தேர்தலில் இவர்கள் மொத்தமாக வென்றார்கள். ஆனால் ஓட்டு வித்தியாசம் சொற்ப அளவில் தான். வரும் சட்டமன்ற தேர்தலில், சிட்டிங் எம்எல்ஏக்கள் தொகுதி மாற திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிலும் ஓரிரு எம்எல்ஏக்கள் மறுபடியும் சீட் வாங்கி ஜெயிக்க முடியாது, வேண்டாம் விட்டு விடுங்கள் என கெஞ்சுவதாக தெரியவந்துள்ளது. மேட்டுப்பாளையம் தொகுதி எம்எல்ஏ செல்வராஜ் மறுபடியும் அதே தொகுதியில் நிற்க விரும்புகிறார். ஆனால் அவரை செங்கோட்டையனின் கோபி பக்கம் போக சொல்லி தலைமை விரும்புவதாக தெரிகிறது. ஊரும், பேரும் தெரியாது. அங்க போய் என்ன செய்யறது. மாவட்ட செயலாளர் பொறுப்பு தந்துட்டாங்க, நான் என்ன செய்யறதுங்க என அப்பாவியாக புலம்பி வருகிறார். இந்த சீனியர் அதிமுக எம்எல்ஏ. மேட்டுப்பாளையத்தில் கடும் போட்டி இருப்பதால் நின்றாலும் கஷ்டம் தான் என அதிமுகவினர் கூறுகின்றனர்.

கோவை சூலூர் அதிமுக கந்தசாமியும் கிராம பகுதி ஓட்டுக்களை வாங்கி ஜெயித்தவர். இவர் தனது தொகுதியில் அதிக காசை எஸ்பி வேலுமணி மூலமாக வாரி இறைத்து வெற்றி பெற்றதாகவும் பேச்சு எழுந்தது. இந்த முறையும் வேலுமணி காப்பாற்றுவார், மறுபடியும் சீட் வாங்கி தருவார் என கந்தசாமி காத்திருக்கிறார். சூலூர் வட்டாரத்தில் திமுக பல்வேறு திட்டங்களை செய்துள்ளது. பைபாஸ் ரோட்டை ஒட்டி பல நிறுவனங்கள் வந்து விட்டது. எனவே, எதுவும் நடக்கவில்லை என எப்படி சொல்லி ஓட்டு கேட்பது என சிட்டிங் எம்எல்ஏ சிந்தித்து வருவதாக கட்சியினர் பேசி கொண்டிருக்கிறார்கள்.

கவுண்டம்பாளையம் அதிமுக எம்எல்ஏ பிஆர்ஜி அருண்குமார், சிங்காநல்லூர் கே.ஆர்.ஜெயராம், கிணத்துக்கடவு தாமோதரன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோரும் பழைய நினைப்பில் காத்திருக்கிறார்கள். தொண்டாமுத்தூர் தொகுதியை மறுபடியும் வெல்ல ஆர்வத்துடன் எஸ்பி வேலுமணி வலம் வருகிறார். வால்பாறை தொகுதி எம்எல்ஏ இறப்பினால் அந்த தொகுதிக்கு அதிமுகவில் யார் போட்டியிடுவார்கள் என தெரியாத நிலையிருக்கிறது. ேகாவை தெற்கு தொகுதி பாஜ எம்எல்ஏ வானதி, தனக்கு வடக்கு அல்லது கவுண்டம்பாளையம் வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளாராம்.

கோவை காளப்பட்டியில் தங்கியுள்ள பாஜ மாஜி தலைவர் அண்ணாமலையும், கவுண்டம்பாளையம் இந்துக்கள் பெல்ட் இங்கே சீட் வேண்டும், கோவை வடக்கு, தெற்கில் சிறுபான்மையினர் ஏராளமாக இருக்கிறார்கள். நமக்கு பட்டை நாமம் போட்டு விடுவார்கள் என வானதியும், அண்ணாமலையும் அடம் பிடித்து வருகிறார்கள். கிணத்துக்கடவில் சிட்டிங் எம்எல்ஏ தாமோதரனை கழற்றி விட்டு எஸ்பி வேலுமணி மைத்துனர் முன்னாள் மதுக்கரை பேரூராட்சி தலைவர் சண்முகராஜாவை இறக்க திட்டமிட்டிருப்பதாக கட்சி வட்டாரத்தில் பேச்சு நிலவுகிறது.

அதே நேரத்தில், அதிமுகவினர் நடத்திய ரகசிய சர்வேயில் ஏற்கனவே போட்டியிட்டவர்கள் மீண்டும் களமிறங்கினால் கஷ்டம் தான். அதிமுக ஓட்டுக்கள் பாஜவால் மேலும் குறைய போகிறது என்ற விவரங்களை தெரிவித்து உள்ளனர். இதை கேட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள் தீவிர யோசனையில் இருப்பதாக தெரிகிறது. பணத்தை வாரி இறைத்து செலவு செய்து தோற்று விட்டால் என்ன செய்வது என புலம்புகிறார்கள். எனவே, சிட்டிங் எம்எல்ஏக்கள் மறுத்தால் புதியவர்களை களமிறக்க வேண்டும் என தலைமை சொல்லி விட்டதாக தெரியவந்துள்ளது.

ஏற்கனவே பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட சிங்கை ராமச்சந்திரன் 3ம் இடத்திற்கு போய்விட்டார். அவரால் தான் கட்சியின் செல்வாக்கு போய் விட்டது என கோவை அதிமுக வட்டாரத்தில் அதிக அதிருப்தி ஏற்பட்டிருக்கிறது. அவரால் கட்சியில் புதியவர்கள், இளைஞர்கள் போட்டியிட தயக்கம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. தலைமை சீனியர்களை விட்டு விடுங்கள், இளைஞர்களை செல்வாக்கு மிக்கவர்களை களம் இறக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. இதனால், சிட்டிங் எம்எல்ஏக்கள் வழி விடுவார்களா, புதியவர்கள் களம் காண்பார்களா என கோவை அதிமுக வட்டாரத்தில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: