ஜெயலலிதா தொகுதிக்கு பாஜ குறி: டெல்லி பஞ்சாயத்து; உள்ளடிக்கு தயாராகும் இலை நிர்வாகிகள்

திருச்சி: வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜ, தாங்கள் விரும்பும் தொகுதிகளை கொடுக்க வேண்டும் என அதிமுகவிற்கு அழுத்தம் கொடுத்து வருவதாக தெரிகிறது. குறிப்பாக, திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதி தங்களுக்கே வேண்டும் என அதிமுகவிடம் பாஜ கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த திருச்சி அதிமுகவினர், ஸ்ரீரங்கம் தொகுதியை பாஜவிற்கு கொடுக்க கூடாது என தலைமையிடம் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்கள். ஆனாலும், பாஜவினர் டெல்லி தலைமையிடம் முறையிட்டுள்ளனர். மிகவும் சென்டிமென்ட் வாய்ந்த தொகுதி ஸ்ரீரங்கம் தொகுதி, எனவே, இங்கு நாம் தான் போட்டியிட வேண்டும் என்று டெல்லி தலைமையும் உறுதியாக உள்ளது. இதனால் அதிமுக-பாஜவினர் இடையே பனிப்போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளதாம். வெற்றி, தோல்வியை பற்றி கவலையில்லை. ஸ்ரீரங்கத்தில் நிற்பதே பாஜ குறிக்கோளாக உள்ளது.

இதுகுறித்து அதிமுக வட்டாரம் கூறுகையில், ‘‘கடந்த 2011ல் நடந்த தேர்தலில் இத்தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து, ஸ்ரீரங்கம் தொகுதி விஐபி தொகுதியாக மாறியது. 2026 தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட முன்னாள் அமைச்சர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். தேர்தல் வேலைகளையும் மறைமுகமாக செய்து வருகின்றனர். இங்கு பெரும்பாலும் கிராமங்கள் இருப்பதால், அப்பகுதிகளை குறி வைத்து அதிமுகவினர் தேர்தல் வேலையில் இறங்கியுள்ளனர். ஆனால், பாஜவினர் களத்திற்கே இன்னும் வரவில்லை. தங்கள் எதிர்ப்பை மீறி, ஒருவேளை ஸ்ரீரங்கம் தொகுதி பாஜவுக்கு ஒதுக்கப்பட்டால், திருச்சி அதிமுகவினர் ‘தங்களின் வேலைகளை’ தேர்தலில் காண்பிக்க தயாராக உள்ளார்கள்.

முக்கியமாக, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதி என்பதால், ஸ்ரீரங்கம் தொகுதியில் அதிமுகவினர் தான் போட்டியிட வேண்டும் என நிர்வாகிகள் விருப்பமாக உள்ளது. குறிப்பாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் எண்ணமும் ஸ்ரீரங்கம் தொகுதியில் அதிமுக தான் போட்டியிட வேண்டும் என உள்ளதாம். ஆனால், பாஜ தலைமை ஸ்ரீரங்கம் தொகுதியை கேட்டு அடம் பிடிப்பதால், என்ன செய்வதென்று தெரியாமல் உள்ளார். தமிழக பாஜ தலைவர்களிடம் ஸ்ரீரங்கம் தொகுதிக்கு பதிலாக திருச்சியில் வேறு தொகுதியை கேளுங்கள் என பேச்சுவார்த்தை நடத்த அதிமுகமுடிவு செய்துள்ளது’ என்றனர்.

Related Stories: