விரைவில் கூட்டணி குறித்து அறிவிப்பு ஓட்டு வாங்குவதற்காக எதை வேண்டுமானாலும் சொல்லலாம்: எடப்பாடி அறிவித்த தேர்தல் வாக்குறுதி குறித்து ராமதாஸ் விமர்சனம்

திண்டிவனம்: ஓட்டு வாங்குவதற்காக எதை வேண்டுமானாலும் சொல்லலாம் என்று எடப்பாடி அளித்த அதிமுக தேர்தல் வாக்குறுதி குறித்து ராமதாஸ் தெரிவித்து உள்ளார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நிர்வாக குழு கூட்டம் நேற்று நடந்தது. இதில், கவுரவ தலைவர் ஜி.கே.மணி, வன்னியர் சங்க தலைவர் பு.தா.அருள்மொழி, செயல் தலைவர் ஸ்ரீகாந்த் உள்ளிட்ட 20 பேர் கலந்து கொண்டனர். கூட்டத்துக்கு பின் ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது: என்னுடைய தலைமையில் நிர்வாக குழு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.

நிர்வாக குழு அலசி ஆராய்ந்து முக்கிய முடிவுகளை எடுத்துள்ளோம். டெல்லி உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்த கருத்தின்படியும், நீதிமன்ற தீர்ப்பின்படியும் அன்புமணி பாமக தலைவர் என்று சொல்ல முடியாது, சொல்லக்கூடாது. பாமகவிலிருந்து அடிப்படை உறுப்பினராக இருக்கக்கூடாது என்று செயற்குழு, பொதுக்குழு நிர்வாக குழு சொல்லிய பிறகும் அன்புமணி பாமகவின் தலைவர் என்று சொல்லித் திரிகிறார். இது நீதிமன்ற அவமதிப்பு செயலாகும். பாமகவின் தலைவர் நான் தான் என்று அன்புமணி கூறுவதை ஊடகங்கள் வெளிப்படுத்தக்கூடாது என்று அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

கூட்டணி பற்றியும் விரிவாக இந்த நிர்வாக குழுவில் பேசினோம். சீக்கிரமே ஒரு நல்ல முடிவை உங்களுக்கு அறிவிப்போம். பாமக அமைக்கும் கூட்டணி மிகப்பெரிய வெற்றி கூட்டணியாக அமையும். இதுதான் சிறந்த கூட்டணி, நல்ல கூட்டணி, நாணயமான கூட்டணி என்று மக்கள் பேசுகின்ற அளவுக்கு இந்த கூட்டணி அமையும். அப்படிப்பட்ட கூட்டணியை அமைக்க தீவிரமாக முயன்று வருகிறோம். விருப்ப மனு அளிக்க ஏராளமான கூட்டம் கூடியது. 4,109 விருப்ப மனுக்களை பெற்றுள்ளோம். இது வரலாறு காணாத நிகழ்ச்சி. இது எங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து, தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துகிறீர்களா? என்ற கேள்விக்கு, ‘‘நாங்கள் சொல்வதைத்தான் நீங்கள் சரியானதாக எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றவர்கள் கூறுவதை நீங்கள் எடுத்துக்கொள்ள கூடாது’’ என்றார். கூட்டணி எப்போது அறிவிக்கப்படும்? என்ற கேள்விக்கு, ‘‘விரைவில் அறிவிக்கப்படும்’’ என்று ராமதாஸ் தெரிவித்தார். பெண்களுக்கு மாதம் ரூ.2000 உதவித்தொகை, ஆண்களுக்கு இலவச பஸ் பயணம் என்று எடப்பாடி பழனிச்சாமி அதிமுக தேர்தல் தேர்தல் வாக்குறுதி என்று அறிவித்துள்ளாரே? என்ற கேள்விக்கு, ‘‘இதனை தேர்தல் வாக்குறுதி என்று கூறுவார்கள்.

எப்படியாவது ஓட்டு வாங்குவதற்காக எதை வேண்டுமானாலும் சொல்லலாம். இதனை மக்கள் தான் தீர்மானிப்பவர்கள். மக்கள் தான் எஜமானர்கள். மக்கள் சரியாக வாக்களிப்பார்கள். ஆனால் நாங்கள் சேரப்போகிற கூட்டணி, அது வெற்றி கூட்டணியாக இருக்கும்’’ என்றார். எடப்பாடி அறிவித்த தேர்தல் வாக்குறுதியை ராமதாஸ் விமர்சித்து உள்ளதால், தேசிய ஜனநாயக கூட்டணியில் ராமதாஸ் இணைய மாட்டார் என்ற பாமக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

* பாஜ-அதிமுக கூட்டணியில் இணைய ராமதாஸ் மறுப்பு: டெல்லி விஐபி நடத்திய பேச்சு தோல்வி
பாமகவில் நிறுவனர் ராமதாஸ், மகன் அன்புமணி இடையே மோதலால் கட்சி இரண்டாக உடைந்து உள்ள நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் அன்புமனி தலைமையிலான பாமக இணைந்து உள்ளது. இந்த கூட்டணியில் ராமதாசையும் இணைக்க வேண்டும் என்று டெல்லி பாஜ மேலிடம் தீவிரம் காட்டி வருகிறது. ஆனால், ராமதாஸ் பிடி கொடுக்காமல் இருந்து வருகிறது. திமுக கூட்டணியில் இணைய விருப்பம் தெரிவித்து உள்ள ராமதாஸ் விரைவில் அறிவிப்பை வெளியிடுவேன் என்று தெரிவித்து உள்ளார்.

கூட்டணியை ராமதாஸ் விரைவில் உறுதி செய்ய இருப்பதை அறிந்த பாஜ, டெல்லியை சேர்ந்த முக்கிய நபரை தைலாபுரம் தோட்டத்துக்கு கடந்த இரவு அனுப்பி ராமதாசுடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது. அப்போது, ‘‘பாமகவுக்கு என 30க்கும் மேற்பட்ட சீட்டை கூட ஒதுக்க அதிமுகவை அடிபணிய வைக்கிறோம். அதில் அன்புமணியை டம்மியாக உங்கள் கூட வச்சுக்கோங்க.. உங்களுக்கு கூடுதல் சீட் தருகிறோம். மேடையை நீங்கள் அன்புமணியுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம். மாம்பழ சின்னம் பாமகவுக்கு கொடுத்து விடுகிறோம்.

ஏ, பி பார்மில் நீங்களே கையெழுத்து போடுங்கள். அன்புமணியை நாங்கள் சமாளித்துக்கொள்கிறோம்’’ என்று முக்கிய நபர் டீல் பேசி உள்ளார். ஆதற்குராமதாஸ், ‘அப்படியா சரி சரி, பொங்கல் கழித்து பார்ப்போம்’ என சலிப்பாக சொல்லி எழுந்து போங்க என சொல்லாமல் சொல்லியிருக்கிறார். இந்த தகவலை பாஜ தலைமையிடம் அந்த முக்கிய நபர் சொல்ல, ‘திமுகவுடன் ராமதாஸ் சேரக்கூடாது’ என டெல்லி உத்தரவு போட்டுள்ளது.இதனால் தைலாபுரம் தோட்டத்துக்கு வரும் ஒவ்வொருவரையும் பாஜக சல்லடை போட்டு கவனித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Related Stories: