சென்னை: பா.ம.க. தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கை: ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படவுள்ள போட்டித் தேர்வுகள் மற்றும் தகுதித் தேர்வுகளின் அட்டவணை அதற்கு முந்தைய ஆண்டு டிசம்பர் மாதத்தில் வெளியிடப்படுவது வழக்கம். 2026ம் ஆண்டில் அதிக எண்ணிக்கையிலான ஆசிரியர் பணியிடங்கள் காலியாகும் என்று எதிர்பார்க்கப்படுவதாலும், தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் உள்ள காலத்தில் போட்டித் தேர்வுகளை நடத்த முடியாது என்பதாலும் தேர்வு அட்டவணை முன்கூட்டியே வெளியிடப்பட வேண்டியது அவசியமாகும்.
தமிழ்நாட்டில் அரசு பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றுக்கு ஆசிரியர்களை தேர்வு செய்வதற்காக 2026ம் ஆண்டில் நடத்தப்படவுள்ள போட்டித்தேர்வுகளின் அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று வரை வெளியிடவில்லை. ஆசிரியர் பணிக்கு செல்லத் துடிக்கும், ஆசிரியர் பணியில் சேர்ந்து அதைத் தக்க வைத்துக் கொள்ள விரும்பும் லட்சக்கணக்கானவர்களின் எதிர்காலம் தொடர்பான விவகாரத்தில் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் இந்த அளவுக்கு அலட்சியம் காட்டுவது கண்டிக்கத்தக்கது. எனவே எளிய பாடத்திட்டம், குறைக்கப்பட்ட தேர்ச்சி மதிப்பெண்கள் ஆகியவற்றுடன் கூட சிறப்புத் தகுதித் தேர்வை அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
