காரைக்குடி: வரும் தேர்தலில் அதிமுக வெற்றி பெற போவதில்லை என அமைச்சர் மு.பெ.சுவாமிநாதன் தெரிவித்தார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கவிஞர் கண்ணதாசன் மணி மண்டபத்தை சீரமைக்கும் பணி தொடர்பாக கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன், செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தமிழ் வளர்ச்சித் துறை, செய்தித்துறை செயலாளர் ராஜாராம், கலெக்டர் பொற்கொடி, முன்னாள் அமைச்சர் மு.தென்னவன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
பின்னர் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: காரைக்குடியில் உள்ள கவிஞர் கண்ணதாசன் மணி மண்டபம் கடந்த 1990ல் பணி தொடங்கப்பட்டு 2 ஆண்டுகளுக்கு பின்னர் பணி முடிக்கப்பட்டது. தற்போது பராமரிப்பு பணி தேவைப்படுகிறது. மணிமண்டபத்தை பராமரிப்பு பணி மேற்கொள்ள வேண்டும் என அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன், கலெக்டர் பொற்கொடி, முன்னாள் அமைச்சர் மு.தென்னவன் ஆகியோர் கோரிக்கை வைத்தனர். இதனைத் தொடர்ந்து பராமரிப்பு பணிக்காக ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
மதிப்பீடு தயார் செய்யப்பட்டு முதல்வர் ஒப்புதலுக்கு கொண்டு செல்லப்படும். ஒப்புதல் கிடைத்தவுடன் பணிகள் தொடங்கப்படும். வரும் தேர்தலில் அதிமுக வெற்றி பெறப் போவதில்லை. அதனால் அதிமுகவின் தேர்தல் அறிக்கை குறித்து கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பல்வேறு திட்டங்கள் செய்துள்ளார். மீண்டும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்த உடன் செய்தியாளர்களுக்கான ஓய்வூதியத்தை உயர்த்துவது தொடர்பாக நடவடிக்கை எடுப்பார். இவ்வாறு கூறினார்.
