சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று இரவு திடீர் பயணமாக, இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் சென்னையில் இருந்து கர்நாடக மாநிலம் மங்களூரு புறப்பட்டு சென்றார். அவரின் பயணம் ரகசியமாக வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் நேற்று இரவு 7 மணி அளவில் சென்னை உள்நாட்டு விமான நிலையம் வந்து, சென்னையில் இருந்து மங்களூருக்கு இரவு 7.45 மணிக்கு புறப்பட்டு செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் மங்களூருக்கு சென்றார். பிரதமர் மோடி 23ம் தேதி தமிழ்நாட்டில் மதுராந்தகத்தில் நடத்த இருக்கும் பொதுக்கூட்டத்திற்கு, எனக்கு அழைப்பு இல்லை.
ஆனால் நான் தனிக்கட்சி தொடங்க மாட்டேன். எனது நிலையை விரைவில் அறிவிப்பேன் என்று நேற்று காலை சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்த நிலையில், நேற்று இரவு திடீரென மங்களூரு புறப்பட்டு சென்றுள்ளார். அவருடைய திடீர் மங்களூரு பயணத்திற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. ஆனால் கோயில் ஒன்றிற்கு ஆன்மிகப் பயணமாக செல்வதாக கூறப்படுகிறது. அவர் இன்று மங்களூருவில் இருந்து பெங்களூரு வழியாக, மதுரை திரும்புவார் என்றும் கூறப்படுகிறது.
