72வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு 109 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் கரூர் கலெக்டர் வழங்கினார்

கரூர், ஜன. 27: 72வது குடியரசு முன்னிட்டு மாவட்ட கலெக்டர் மலர்விழி தேசிய கொடி ஏற்றி வைத்து 109 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். ஆண்டுதோறும் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தின விழாக்கள் கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை ஆரம்பத்தில் திருவள்ளுவர் மைதானத்திலும், கடந்த சில ஆண்டுகளாக கரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்திலும் நடைபெற்று வந்தது. தற்போது கொரனோ பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு அமலில் உள்ளதால், கடந்த சுதந்திர தினம் மற்றும் நேற்று நடைபெற்ற குடியரசு தின விழா ஆகியவை கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. கலெக்டர் மலர்விழி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, கலெக்டர் மலர்விழி, எஸ்பி பகலவன், டிஆர்ஓ ராஜேந்திரன் ஆகியோர் சமாதானத்தை வலியுறுத்தும் வகையில் புறாக்களை பறக்க விட்டு, போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து, வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, மாவட்ட தொழில் மையம் உட்பட பல்வேறு துறைகளின் சார்பில் 109 பயனாளிகளுக்கு ரூ. 1கோடியே 38லட்சத்து 32ஆயிரத்து 530 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் கலெக்டர் வழங்கினார்.  மேலும், 39 காவலர்களுக்கு முதல்வரின் காவலர் பதக்கமும் வழங்கப்பட்டது. அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். தியாகிகள் மற்றும் அவர்களின் வாரிசுகள் 61பேருக்கு, அவரவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று அந்தந்த பகுதி அதிகாரிகள் மரியாதை செலுத்தினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>