பிட்ஸ்

* ஆஸி ஓபன் டென்னிஸில் ஸ்டான் வாவ்ரிங்கா
மெல்போர்ன்: ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் பங்கேற்க, சுவிட்சர்லாந்தை சேர்ந்த முன்னாள் சாம்பியன் மற்றும் 3 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றவரான ஸ்டான் வாவ்ரிங்காவுக்கு வைல்ட் கார்ட் என்ட்ரி எனப்படும் சிறப்பு நுழைவு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தவிர, ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஜோர்டான் தாம்ப்சன், கிறிஸ் ஓ கானல் ஆகியோரும் சிறப்பு நுழைவு மூலம் ஆஸி ஓபன் டென்னிஸ் போட்டியில் விளையாட உள்ளனர். தற்போது 40 வயதாகும் வாவ்ரிங்கா, ஓய்வு பெறுவதற்கு முன் கடைசியாக ஆஸி ஓபன் டென்னிஸில் ஆடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

* ஏஎஸ்பி டென்னிஸ் எலினா அமர்க்களம்
ஆக்லாந்து: நியூசிலாந்தின் ஆக்லாந்தில் நேற்று நடந்த ஏஎஸ்பி கிளாசிக் மகளிர் ஒற்றையர் டென்னிஸ் காலிறுதிப் போட்டியில் உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினா, பிரிட்டன் வீராங்கனை ஸோனே கார்டலை 6-4, 6-7 (2-7), 7-6 (7-5) என்ற செட் கணக்கில் போராடி வென்றார். இதையடுத்து, அரை இறுதிக்கு அவர் தகுதி பெற்றார். மற்றொரு போட்டியில் அமெரிக்க வீராங்கனை இவா ஜோவிக் 6-2, 7-6 (8-6) என்ற நேர் செட் கணக்கில் வெற்றி வாகை சூடினார். இன்று நடக்கும் அரை இறுதிப் போட்டியில் எலினா ஸ்விடோலினா – இவா ஜோவிக் மோதவுள்ளனர்.

* டாடா ஸ்டீல் செஸ் ஆனந்த் முதலிடம்
கொல்கத்தா: டாடா ஸ்டீல் செஸ் இந்தியா ரேபிட் செஸ் போட்டிகள் கொல்கத்தாவில் நடந்து வருகின்றன. நேற்று நடந்த போட்டியில் தமிழகத்தை சேர்ந்த செஸ் ஜாம்பவானும், 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்றவருமான விஸ்வநாதன் ஆனந்த், போட்டியின் துவக்கத்தில் பின்னடைவை சந்தித்தபோதும் பின்னர் சுதாரித்து ஆடி அடுத்தடுத்து இரு வெற்றிகளை பெற்றார். இதன் மூலம் 4.5 புள்ளிகளுடன் பட்டியலில் அவர் முதலிடம் பிடித்தார். போட்டியில் பங்கேற்ற மற்றொரு இந்திய வீரர் நிஹல் சரீனும், 4.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

Related Stories: