மாநில பாதுகாப்பு மற்றும் உயர்ந்த உழைப்பாளர் விருது வழங்கும் விழா பெண்கள் பாதுகாப்பாக பணிபுரிய கூடிய மாநிலம் தமிழ்நாடு: அமைச்சர் சி.வி.கணேசன் பேச்சு

சென்னை: மாநில பாதுகாப்பு விருதுகள் மற்றும் உயர்ந்த உழைப்பாளர் விருதுகள் வழங்கும் விழாவை சென்னை, கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நேற்று தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் மற்றும் தேசிய பாதுகாப்பு குழுமம், தமிழ்நாடு பிரிவு இணைந்து நடத்தியது. விழாவில் 196 தொழிற்சாலை நிர்வாகத்தினருக்கு மாநில பாதுகாப்பு விருதுகள், 122 தொழிலாளர்களுக்கு உயர்ந்த உழைப்பாளர் விருதுகளை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் வழங்கினார்.

தொடர்ந்து, அமைச்சர் சி.வி.கணேசன் பேசியதாவது: குழந்தை தொழிலாளர்களற்ற மாநிலமாகவும் பெண்கள் பாதுகாப்பாக பணிபுரியக்கூடிய மாநிலமாகவும் தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது. தமிழ்நாடு அரசால் தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமான பணியிடங்களில் விபத்துகளை குறைக்கும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

தொழிற்சார் விபத்துகளை குறைப்பதில் சிறப்பான பங்களிப்பை வழங்கிய தொழிற்சாலை நிர்வாகளுக்கு கேடயங்களும் உற்பத்தியை அதிகரிக்கவும், பணியிடப் பாதுகாப்பினை மேம்படுத்தவும் சிறந்த ஆலோசனைகளை வழங்கிய தொழிலாளர்களுக்கு காசோலைகளும் வழங்கப்பட்டன. தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை செயலாளர் வீர ராகவ ராவ் தலைமையேற்று உரையாற்றினார்.

முன்னதாக, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர் ஆனந்த் வரவேற்றார். தேசிய பாதுகாப்பு குழுமம், தமிழ்நாடு பிரிவின் செயலாளர் ராஜ்மோகன் பழனிவேல் நன்றி கூறினார். விழாவில் விருது பெற்றவர்களை தவிர சுமார் 800 தொழிற்சாலை நிர்வாகத்தினர் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்து வந்து கலந்து கொண்டனர்.

Related Stories: