பென்னாகரம்: ஒகேனக்கல் மாமரத்துக்கடவு பரிசல் துறையிலிருந்து, 2 ஆண்டுக்கு பின்பு மீண்டும் பரிசல்கள் இயக்கம் தொடங்கியுள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர். கர்நாடக மாநிலத்தில், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக, கடந்த 2 ஆண்டுக்கு முன்பு அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் முழு கொள்ளளவை எட்டிய போது, அதிகளவில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும், நீர்வரத்து அதிகரிப்பால், மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியது.
இதையடுத்து, மேட்டூர் அணையின் நீர்த்தேக்கம் ஒகேனக்கல் மெயினருவி வரை இருந்தது. இதனைத் தொடர்ந்து சின்னாறு, கோத்திக்கல் பரிசல் துறையிலிருந்து மணல்திட்டு வரை மட்டுமே பரிசல் இயக்கத்திற்கு அனுமதிக்கப்பட்டிருந்தது. தற்போது, ஒகேனக்கல் காவிரியில் வரும் நீரின் அளவு விநாடிக்கு 2000 கனஅடியாக உள்ளது. இதன் காரணமாக, ஒகேனக்கலில் நீர்த்தேக்கம் முற்றிலுமாக குறைந்தது. இதனால், 2 ஆண்டுகளுக்கு பின்பு மாமரத்துக்கடவு பரிசல் துறையில் இருந்து, மீண்டும் பரிசல்கள் இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுற்றுலா பயணிகள் பாறைகளுக்கிடையே பரிசலில் செல்லும் போது, புதுமையான அனுபவத்தை பெறுவார்கள். இதனிடையே, மாமரத்துக்கடவு பரிசல் துறை மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
