மதுரை: நீதிமன்ற வழிகாட்டுதல்படி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும் என அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார். தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் வரும் 15ம் தேதி அவனியாபுரம், 16ல் பாலமேடு மற்றும் 17ம் தேதி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்க உள்ளன. இதற்கான முன்னேற்பாடு பணிகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அரசுத் துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நேற்று மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமை வகித்தார். கலெக்டர் பிரவீன்குமார், போலீஸ் கமிஷனர் லோகநாதன், மாநகராட்சி கமிஷனர் சித்ராவிஜயன், எஸ்பி அரவிந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் காளைகளுக்கான ஆன்லைன் முன்பதிவு, மாடுபிடி வீரர்கள் தேர்வு, மருத்துவ வசதி, பார்வையாளர்களுக்கான வசதிகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில் அமைச்சர் பி.மூர்த்தி கூறியதாவது: தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள், கடந்தாண்டை போலவே இந்த ஆண்டும் சிறப்பாக நடத்தப்படும். முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர், ஜல்லிக்கட்டை பார்வையிட வர வேண்டுமென மாவட்ட நிர்வாகம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எந்த சமூகத்திற்கும் பாகுபாடு பார்க்காமல், உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற வழி காட்டுதல்படி, அரசு ஆணைக்கு ஏற்ப ஜல்லிக்கட்டு நடத்தப்படும். விதிமுறைகளுக்கு மாறாக எதுவும் நடக்காது. இவ்வாறு கூறினார்.
