கெபெர்ஹா: தென் ஆப்பிரிக்காவில் எஸ்ஏ 2025 டி20 தொடர் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 5வது லீக் போட்டியில் ஸ்டப்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி, கேசவ் மஹராஜ் தலைமையிலான பிரிட்டோரியா கேப்பிடல்ஸ் அணியுடன் மோதியது. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி முதலில் பேட்டிங் ஆடியது. தொடக்க வீரர்களாக பேர்ஸ்டோ மற்றும் டிகாக் களமிறங்கினர். ஆட்டத்தின் 2வது ஓவரிலேயே நிகிடி பந்துவீச்சில் பேர்ஸ்டோ ஸ்டம்புகள் சிதற ஆட்டமிழந்தார். அதன் பின்னர் டிகாக்குடன் கூட்டணி சேர்ந்த பிரீட்ஸ்கி பிரிடோரியா கேப்பிடல்ஸ் பந்துவீச்சை வெளுத்து வாங்கினார்.
மறுபுறம் டிகாக்கும் வெளுத்துக்கட்ட, இருவரையும் அவுட்டாக்க முடியாமல் எதிரணி பந்துவீச்சாளர்கள் திணறினர். ஒருவழியாக 13வது ஓவரில் பார்சன்ஸ் பந்துவீச்சில் டிகாக் அவுட்டானார். அவர் 47 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 77 ரன்கள் குவித்தார். 33 பந்துகளில் 52 ரன்கள் குவித்த பிரீட்ஸ்கி அடுத்த ஓவரிலேயே லூபே பந்துவீச்சில் போல்டானார். இறுதி கட்டத்தில் ஹெர்மேன் அதிரடியாக 37 ரன் குவிக்க 20 ஓவர் முடிவில் அந்த அணி 6 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் குவித்தது. பிரிட்டோரியா பந்துவீச்சில் மில்ஸ் 2 விக்கெட் வீழ்த்தினார். 189 ரன்கள் இலக்கை துரத்திய பிரிட்டோரியா அணியின் பார்சன் முதல் ஓவரிலேயே தன் விக்கெட்டை பறிகொடுத்தார். அதை தொடர்ந்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸின் ஹோப் 19 பந்துகளில் 36 ரன்கள் குவித்து மிரட்டினார்.
எனினும் 6 ஓவரிலேயே ஹோப்பை போல்டாக்கினார் மில்னே. அணியின் ஒரே நம்பிக்கையான ரூதர்போர்ட் விக்கெட்டையும் மில்னே கைப்பற்ற பிரிட்டோரியா அணியின் தோல்வி உறுதியானது. 18 ஓவரிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த பிரிட்டோரியா அணி 140 ரன்கள் மட்டுமே குவித்தது. அசத்தலாக பந்துவீச்சிய சன்ரைசர்ஸ் அணியின் மில்னே 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 47 பந்துகளில் 77 ரன்கள் குவித்த டிகாக் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார். சன்ரைசர்ஸ் அணி தனது அடுத்த போட்டியில் நாளை பார்ல் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
