குளச்சல் காவல் நிலையத்தில் காதலனுடன் சென்ற மகளின் காலில் விழுந்து கதறிய தாய்

*3 மணி நேர பாச போராட்டத்தால் பரபரப்பு

குளச்சல் : காதலனை திருமணம் செய்ய இளம்பெண் காதலனை தேடி வீட்டிற்கு சென்றதையடுத்து தாய் கடத்தல் நாடகமாடியதால் குளச்சல் காவல் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.திற்பரப்பு பகுதியை சேர்ந்தவர் நாகப்பன் (51). இவரது மகள் நிஷாந்தி (24). குலசேகரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு கூடத்தில் வேலை பார்த்து வருகிறார். அவரது பாட்டி ஊர் குளச்சல் தும்பக்காட்டில் உள்ளது. பாட்டி ஊரில் நடக்கும் கோயில் விழாக்களுக்கு நிஷாந்தி சென்று வருவது வழக்கம்.

அப்போது பாட்டி ஊரில் உள்ள பகவதியப்பன் மகன் அபினாஷ் (27) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தனர். அபினாஷ் கல்குளம் தாலுகா அலுவலகத்தில் நில அளவையாளராக வேலை பார்த்து வருகிறார். இவர்களது காதலுக்கு நிஷாந்தி வீட்டினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் நிஷாந்திக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து வரும் ஜனவரி 12ம் தேதி நிச்சயதார்த்தம் நடத்த நிஷாந்தி வீட்டினர் முடிவு செய்திருந்தனர். தனக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்தது நிஷாந்திக்கு பிடிக்கவில்லை.

இதனால் அவர் காதலன் அபினாஷை திருமணம் செய்ய முடிவு செய்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் வேலைக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு வெளியே வந்த நிஷாந்தி நேராக குளச்சலில் உள்ள காதலன் அபினாஷ் வீட்டிற்கு சென்றார்.

காதலனின் வீட்டில் இருவரும் திருமணம் செய்து கொண்ட போட்டோவை நிஷாந்தி தனது செல்போன் ஸ்டேட்டஸில் வைத்திருந்தார். இதனை அறிந்த அவரது தாய் மகளுக்கு வேறு இடத்தில் பார்த்திருந்த மாப்பிள்ளைக்கு தகவல் தெரிவித்துவிட்டு மகள் குளச்சலில் ஒரு வீட்டில் கடத்தி வைக்கப்பட்டுள்ளதாக போலீசில் புகார் செய்தார்.

இதை நம்பிய மாப்பிள்ளையும் குளச்சல் காவல் நிலையத்திற்கு வந்தார். போலீசார் நிஷாந்தியை செல்போனில் தொடர்பு கொண்டபோது அவர் அபினாஷ் வீட்டில் இருப்பது தெரிய வந்தது. பின்னர் அவர் அபினாசுடன் காவல் நிலையத்தில் ஆஜரானார். அப்போது அவர் தன்னை யாரும் கடத்தவில்லை. வீட்டில் வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்ததால் அபினாஷை திருமணம் செய்ய முடிவு எடுத்தேன் என்றார்.

இதனையறிந்த காவல் நிலையத்திற்கு வந்திருந்த மாப்பிள்ளை திரும்பி சென்று விட்டார். மகளை பார்த்ததும் தாய், நிஷாந்தியின் காலில் விழுந்து தன்னுடன் வருமாறு கெஞ்சினார். ஆனால் நிஷாந்தி காதலனுடன் செல்வதில் உறுதியாக இருந்தார்.

தாய் அழுது புரண்டும் நிஷாந்தி கேட்கவில்லை.காவல் நிலையத்தில் தாய் நடத்திய பாசப்போராட்டம் சுமார் 3 மணி நேரம் நீடித்தது. இறுதியில் நிஷாந்தியின் காதலே வென்றது. இதையடுத்து போலீசார் அறிவுரை வழங்கி நிஷாந்தியை காதலன் அபினாசுடன் அனுப்பி வைத்தனர். மகள் கடத்தப்பட்டார்? என நாடகமாடிய தாயை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

Related Stories: