அறுவடை பருவத்தில் மழை கொத்தமல்லி மகசூல் பாதிப்பு

தர்மபுரி, ஜன.22: தர்மபுரி அருகே கொத்தமல்லி அறுவடை பருவத்தில் தொடர் மழையால் மகசூல் பாதிக்கப்பட்டுள்ளதால், இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  தர்மபுரி மாவட்டத்தில் மதிகோன்பாளையம், குப்பூர், அன்னசாகரம், எட்டிமரத்துப்பட்டி, புலிகரை, கடகத்தூர், பஞ்சப்பள்ளி, மொரப்பூர் உள்ளிட்ட பகுதிகளில், சுமார் 100 ஏக்கரில் விவசாயிகள் கொத்தமல்லி சாகுபடி செய்துள்ளனர். இது, பனிப்பொழிவு ஈரப்பதத்திலேயே விளையக்கூடியதாகும். கடந்த கார்த்திகை மாத இறுதியில், பனிப்பொழிவு குறைந்து காணப்பட்டதால், விவசாயிகள் குறைந்த அளவே சாகுபடி செய்தனர். தற்போது அறுவடை பருவத்தில், கொத்தமல்லி செடிகள் சாய்தது. கடந்த வாரம் தொடர்ந்து பெய்த மழையினால் கொத்தமல்லி பாதிக்கப்பட்டது. இதனால் மகசூல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விவசாயி சசிகுமார் கூறுகையில், ‘20 வருடத்திற்கு பிறகு 2ஏக்கரில் கொத்தமல்லி சாகுபடி செய்துள்ளோம். அறுவடை பருவத்தில் பருவமழை தொடர்ந்து பெய்ததால், மகசூல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு ஏக்கருக்கு 10 மூட்டை கிடைக்கும். ஒரு மூட்டையில் 40கிலோ இருக்கும். ஆனால் இப்போது மிகக்குறைவாகவே கிடைக்கும். ஒருகிலோ ₹100 விற்பனையாகும். பருவத்தில் தொடர் மழையால் மகசூல் பாதிக்கப்பட்டுள்ளதால், விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்,’ என்றனர்.

Related Stories:

>