காற்று மாசு விவகாரத்தில் மோதல்: டெல்லி ஆளுநரை ‘கஜினி’ போல் சித்தரித்து போஸ்டர் வெளியிட்ட ஆம் ஆத்மி

 

புதுடெல்லி: டெல்லியில் காற்று மாசு விவகாரத்தில் துணை நிலை ஆளுநரை கஜினி திரைப்பட பாணியில் சித்தரித்து ஆம் ஆத்மி வெளியிட்ட போஸ்டரால் பாஜகவுடன் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. டெல்லியில் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம்ஆத்மி அரசு, காற்று மாசை கட்டுப்படுத்த தவறிவிட்டதாகவும், இது தொடர்பாக ‘குற்றவியல் நடவடிக்கை’ தேவைப்படும் வகையில் அலட்சியத்தை காட்டியதாகவும் துணை நிலை ஆளுநர் வி.கே. சக்சேனா குற்றம் சாட்டியிருந்தார். இது தொடர்பாக அவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எழுதிய 15 பக்க கடிதத்தில், மெட்ரோ ரயில் நான்காம் கட்ட பணிகள் மற்றும் ஒன்றிய அரசின் மின்சாரப் பேருந்து திட்டங்களை முடக்கியதாக குறிப்பிட்டிருந்தார்.

மேலும், தனது போன் நம்பரை கெஜ்ரிவால் பிளாக் செய்துள்ளதால் கடிதம் எழுதுவதாகவும் கூறியிருந்தார். ஆளுநரின் இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில்தான் தற்போதைய மோதல் வெடித்துள்ளது. ஆம் ஆத்மி கட்சி நேற்று தனது சமூக வலைதள பக்கத்தில் ‘கஜினி’ திரைப்படப் பாணியில் ஒரு போஸ்டரை வெளியிட்டது. அதில், ஆளுநர் சக்சேனாவின் முகத்தை மார்பிங் செய்து, உடலில் ‘கெஜ்ரிவால் தான் காரணம்’, ‘காற்று தரக்குறியீடு 750’ என்று பச்சைக்குத்தி இருப்பதைப் போல சித்தரிக்கப்பட்டிருந்தது.

டெல்லியில் தற்போது பாஜக ஆட்சி நடப்பதை மறந்துவிட்டு, ஆளுநர் பழைய நினைவில் பேசுவதாகக் கிண்டலடித்து, ‘துணை நிலை ஆளுநர் என்றால், லோ குவாலிட்டி கஜினி’ எனவும் விமர்சித்திருந்தது. இதற்குப் பதிலடி கொடுத்துள்ள டெல்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா, ‘கடந்த 12 ஆண்டுகளாக ஆம் ஆத்மி செய்த பாவங்களுக்குப் புதிய அரசு பொறுப்பேற்க முடியாது. கஜினி போஸ்டரில் கெஜ்ரிவால் படத்தை வைத்தால்தான் பொருத்தமாக இருக்கும்’ என்று கடுமையாகச் சாடியுள்ளார்.

Related Stories: