சென்னை: அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்கு ரூ.34.30 கோடி மதிப்பிலான 20 அதிநவீன குளிர்சாதன சொகுசு பேருந்துகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். போக்குவரத்துத் துறை சார்பில் சென்னை, தீவுத்திடல் வளாகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்கு 34.30 கோடி ரூபாய் மதிப்பிலான பல அச்சுகள் கொண்ட 20 அதிநவீன குளிர்சாதன சொகுசு பேருந்துகள் இயக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இப்பேருந்து சேவை தமிழ்நாடு போக்குவரத்து துறை மூலமாக முதன்முறையாக தமிழ்நாட்டின் பல்வேறு தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய பல அச்சுகள் கொண்ட 20 அதிநவீன குளிர்சாதன வசதி கொண்ட புதிய பேருந்தில் பயணிகளுக்கு உயர்தர மற்றும் வசதியான இருக்கை அமைப்பு – 2×2 சீட்டிங் அமைப்புடன் அதிகபட்சம் 51 வசதியான இருக்கைகள், வெளிப்புற காட்சியை ரசிக்க விசாலமான ஜன்னல்கள்,
உயர்தர மேல்நிலை பொருட்கள் வைக்குமிடம் உயர்தர இருக்கைகள் – கால் சப்போர்ட் வசதியுடன் கூடிய இருக்கைகள், இரட்டை சார்ஜிங்க் பாயிண்ட்கள் , பத்திரிகைகள், பாட்டில் ஹோல்டர், காலணி வைக்கும் இடம்; வசதியான மற்றும் பாதுகாப்பான ஓட்டுநர் கேபின் – மனித உடல் அமைப்பிற்கு ஏற்ற வசதி, வளைந்த வடிவ டேஸ் போர்ட், நல்ல காற்றோட்டம் கொண்ட ஓட்டுநர் இருக்கை, முழங்கால் பாதுகாப்பு அமைப்பு,
மேம்பட்ட பிரேக்கிங் மற்றும் பாதுகாப்பு அமைப்புகள், பயணிகள் பாதுகாப்பை முன்னிலைப்படுத்தும் தீ பாதுகாப்பு அமைப்பு, அவசரநிலையில் விரைவாக பயணிகளை வெளியேற்ற அகலமான அவசர கத்வுகள், முன், பின் மற்றும் பக்க மோதல்களில் தாக்கத்தை குறைக்கும் பாதுகாப்பு அமைப்புகள், உள்ளிட்ட மேம்பட்ட பல வசதிகளோடு இந்த பேருந்தில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு அம்சங்கள் – குறைந்த கார்பன் உமிழ்வு, அதிக வலிமையான வாகன அமைப்பு, அவசரகாலத்தில் பயணிகள் வெளியேறுவதற்கு அவசரகால வெளியேறும் வழி, விபத்துகளை தவிர்த்திட வாகனத்தின் முன் மற்றும் பின் பகுதிகளில் கேமராக்கள், வாகன செயல்திறன் மற்றும் கோளாறுகளை உடனுக்குடன் கண்டறிய வசதி, ரிவர்ஸ் சென்சார் வசதி மற்றும் கேமரா, வாகனத்தை கண்காணித்திட பஸ் டிராக்கிங் சிஸ்டம்வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் இப்பேருந்துகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
மேலும்,பேருந்து போக்குவரத்தை நாட்டுடைமையாக்கும் வகையில் தமிழ்நாடு அரசால் அரசு போக்குவரத்து கழகங்கள் தொடங்கப்பட்டு 50ம் ஆண்டு (1976 – 2025) பொன்விழா நடந்து வருவதையொட்டி போக்குவரத்து கழகங்களில் பணியாற்றி வரும் 1,05,778 ஊழியர்களுக்கு 3.33 கோடி ரூபாய் மதிப்பிலான சுவர் கடிகாரங்கள் வழங்கிடும் விதமாக தமிழ்நாடு முதல்வர் நேற்று 10 போக்குவரத்து ஊழியர்களுக்கு சுவர் கடிகாரங்களை வழங்கி தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன், போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கர், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, போக்குவரத்துத் துறை செயலாளர் சுன்சோங்கம் ஜடக் சிரு, மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் பிரபுசங்கர், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் மோகன், விஇ கமர்சியல் வாகனங்கள் முதுநிலை துணை தலைவர் சுரேஷ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
